ரயில் இன்ஜின் டிரைவர்கள் வேலைக்கு வரும்பொழுதும் பணி முடிந்து செல்லும் பொழுதும் இளநீர் மற்றும் குறிப்பிட்ட வகை பழங்கள் என ஒரு சில பொருட்களை உண்ணக்கூடாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருப்பது ரயில் இன்ஜின் டிரைவர்களிடையே எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரம் மண்டல சீனியர் எலக்ட்ரிகல் இன்ஜினியர் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
ரயில் இன்ஜின் டிரைவர்கள் வேலைக்கு வரும்பொழுதும் வேலை முடிந்து செல்லும் பொழுதும் இளநீர், குறிப்பிட்ட வகை பழங்கள், இருமல் மருந்துகள், குளிர்பானங்கள் மற்றும் வாய் புத்துணர்ச்சி ஊட்டிகள் போன்றவற்றை சாப்பிடக்கூடாது என இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு காரணமாக ரயில்வே துறை தெரிவித்திருப்பதாவது :-
ரயில் இன்ஜின் டிரைவர்கள் ரயிலை இயக்குவதற்கு முன்பாக ஆல்கஹால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அந்த பரிசோதனையில் உடலில் ஆல்கஹாலின் அளவு அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் தான் இது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். அதாவது ரயில் என்ஜின் டிரைவர்கள் இளநீர் பழங்கள் இருமல் மருந்து குளிர்பானங்கள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் ஆல்கஹால் பரிசோதனை கருவிகள் உடலில் ஆல்கஹால் அளவு அதிகமாக இருப்பதாக காட்டுவதாகவும் காரணம் கேட்டால் ரயில் இன்ஜின் டிரைவர்கள் மேலே குறிப்பிட்ட அவற்றை தான் சாப்பிட்டு விட்டு வந்ததாக தெரிவித்து வந்துள்ளனர்.
இதனை எவ்வாறு சரி செய்வது என குழம்பிப்போன ரயில்வே நிர்வாகம் தற்பொழுது இது போன்ற ஒரு முடிவை எடுத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது. எனினும் ரயில் என்ஜின் டிரைவர்கள் இடையே இது மிகப்பெரிய எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. ஆல்கஹால் பரிசோதனை கருவி பிரச்சனை என்றால் அவற்றை தான் மாற்ற வேண்டும் என்றும் தங்களுக்கு இது போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது சரியானதா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.