நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் நடக்கும் கலப்படத்தை கண்டறிவது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
1)டீத்தூள் கலப்படம்
ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து கலந்துவிடுங்கள்.டீத்தூள் நிறம் தண்ணீரில் உடனே இறங்கினால் அது கலப்படம் செய்யப்பட்டவை என்று அர்த்தம்.அதுவே டீ தூள் தண்ணீரில் கலக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அது ஒரிஜினல் என்று அர்த்தம்.
2)தேன் கலப்படம்
ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றுங்கள்.தேன் தண்ணீருக்கு அடியில் தேங்கி கரையாமல் இருந்தால் அது ஒரிஜினல்.அதுவே தண்ணீருடன் கலந்து கரைந்தால் அது தேன் இல்லை சர்க்கரை பாகு அல்லது வெல்லப்பாகு என்று அர்த்தம்.
3)சர்க்கரை கலப்படம்
ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து கலந்துவிடுங்கள்.கலப்படம் இல்லாத சர்க்கரையாக இருந்தால் தண்ணீர் நிறம் மாறாமல் இருக்கும்.அதுவே கலப்படம் செய்யப்பட்ட சர்க்கரையில் சுண்ணாம்பு கலந்திருந்தால் அவை தண்ணீருக்கு அடிப்பகுதியில் படியும்.
4)பட்டை கலப்படம்
பிரியாணி,அசைவ உணவுகளில் பயன்படுத்தும் பட்டையில் கூட கலப்படம் நடக்கிறது.பட்டையில் சுருள் பட்டை சாதாரண பட்டை என்று இருவகை இருக்கிறது.சுருள் பட்டை தான் தரமான பட்டை.சாதராண பட்டை சற்று தரம் குறைந்தவையாகும்.சாதாரண பட்டையை பாலிஷ் செய்து சுருள் பட்டையாக தற்பொழுது மார்க்கெட்டில் விற்கின்றனர்.
5)மிளகாய் தூள் கலப்படம்
காரசாரமான மிளகாய் தூளில் செங்கல் தூள்,மரத்தூள் போன்ற கலப்படம் நடக்கிறது.மிளகாய் தூளில் நடைபெறும் கலப்படத்தை கண்டறிவது சுலபம் தான்.ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இப்படி செய்யும் பொழுது தண்ணீருக்கு அடியில் துகள்கள் தேங்கினால் அது கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
6)காபித் தூள் கலப்படம்
ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி காபி தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.காபி தூள் நிறம் தண்ணீரில் உடனடியாக கலந்தால் அவை கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.அதுவே காபி தூள் தண்ணீரில் மேல் மிதந்தால் அவை ஒரிஜினல் என்று அர்த்தம்.இதுபோன்ற கலப்படத்தை கண்டறிந்து கொண்டால் இனி தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம்.