சில எதிர்பாராத செயல்களில் ஈடுபடும் பொழுது நமக்கு அடி,காயம் படுதல் போன்றவை சகஜமான ஒன்று தான்.இருப்பினும் உடலில் காயங்கள் ஏற்படுவதை பொறுத்து தான் அது சாதாரணமானதா இல்லை அசாதாரணமானதா என்று சொல்ல முடியும்.
சிலருக்கு தலை,கண் உள்ளிட்ட ஆபத்தான இடங்களில் அடிபட்டால் அவர்களது வாழ்நாள் முழுவதும் ஏதேனும் ஒரு பாதிப்பை அனுபவித்துக் கொண்டே இருக்க நேரிடும்.நமது உடலில் எந்த பகுதியில் அடிபட்டாலும் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.குறிப்பாக தலையில் அடிபட்டால் அலட்சியம் செய்யவேக் கூடாது.
நாம் சிறிது தாமதம் அல்லது அலட்சியம் செய்தாலும் அவை நம் உயிருக்கே ஆபத்தாக மாறலாம்.தலையில் அடிபட்டால் நீங்கள் நிச்சயம் மருத்துவ உதவியை நாட வேண்டும்.தலையில் கடுமையான காயம் அல்லது அடிபடும் பொழுது திசுக்களில் சேதம் ஏற்படும்.
உங்களுக்கு லேசான காயங்கள் தலையில் ஏற்பட்டிருந்தால் அவை தலைவலி,எரிச்சல்,தலைச்சுற்றல்,குழப்பம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.அதேபோல் தலையில் கடுமையான காயங்கள் அல்லது அடிபட்டால் நினைவாற்றலையே இழக்க நேரிடும்.கடுமையான தலைவலி,வாந்தி,பேச்சில் தெளிவின்மை,காது மற்றும் மூக்கில் இருந்து இரத்தம் வருதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
ஒருவருக்கு தலையில் சாதாரண காயம் அல்லது அசாதாரண காயம் இருந்தால் அலட்சியம் செய்யாமல் முதலில் மருத்துவமனைக்கு அழைத்த செல்ல வேண்டும்.முதலில் அவரை அசைக்காமல் பிடித்துக் கொண்டு ஒரு சுத்தமான துணியை கொண்டு காயம் ஏற்பட்ட இடத்தில் கட்ட வேண்டும்.பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை பெற உதவ வேண்டும்.
தலையில் காயம் ஏற்பட்டால் நீங்களே சுய மருத்துவம் பார்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.இது பின்னாளில் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.வாகனத்தில் செல்லும் பொழுது தலைக்கவசத்தை அணிய வேண்டும்.உரிய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.எனவே இனி தலையில் அடிபட்டால் அலட்சியம் கொள்ளாமல் முதலுதவியை எடுத்துக் கொண்ட பிறகு மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.