எந்த நாடாக இருந்தாலும் அந்த அரசு மக்களிடம் வரியை வாங்கும். அந்த வரி பணத்தில்தான் அரசுக்கான எல்லா செலவுகளையும் செய்வதோடு, பல திட்டங்களையும் போடுவார்கள். இந்தியாவை பொறுத்தவரை மக்களிடமிருந்து அதிக வரிப்பணம் அரசுக்கு செல்கிறது. இதுபோக ஒவ்வொரு மாநில அரசுகளிடமிருந்தும் ஜி.எஸ்.டி என்கிற பெயரில் வரிப்பணத்தை மத்திய அரசு பெறுகிறது.
இதுபோக பல வகைகளில் இருந்தும் மத்திய அரசுக்கு வரி பணம் செல்கிறது. குறிப்பாக தனி நபர் வருமான வரி இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய அரசு ஒவ்வொரு முறை பாராளுமன்றத்தில் நிதி பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போதும் வருடத்திற்கு இவ்வளவு மேல் சம்பாதித்தால் இவ்வளவு வரி என அறிவிக்கிறது. இது மாறிக்கொண்டே இருக்கும். தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு போன வருடம் 7 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அதாவது வருடத்திற்கு 12 லட்சம் சம்பாதிக்கும் வரை ஒருவர் வருமான வரி கட்ட தேவையில்லை. அதற்கு மேல் வரிமானத்திற்கு ஏற்ப வரி கட்ட வேண்டிய சதவீதம் மாறிக்கொண்டே இருக்கும். அதேநேரம், நிறைய பணம் சம்பாதிக்கும் பலரும் சரியாக வரியை கட்டுவதில்லை. பல வகைகளிலும் மோசடிகள் செய்தும், போலி ஆவணங்களை உருவாக்கியும் தங்களின் உண்மையான வருமானத்தை குறைத்துக்காட்டி வருமான வரித்துறையை ஏமாற்றி வருகிறார்கள். இது காலம் காலமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படி ஏமாற்றுபவர்களை கண்காணிக்க மத்திய அரசு புது முயற்சி எடுத்திருக்கிறது. அடுத்த வருடம் முதல் வருமான வரி அதிகாரிகள் தனிநபரின் இ-மெயில், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைத்தள கணக்குகளை அவர்களின் அனுமதியின்றி அணுகமுடியும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வருமானம் மற்றும் சொத்துக்கள் பற்றிய முழுத்தகவலையும் வெளியிடவில்லை என அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தால் சம்பந்தப்பட்ட நபரின் மின்னஞ்சல், வங்கி மற்றும் சமூகவலைத்தள கணக்குகளை பயன்படுத்தி உண்மையை பரிசோதிக்க முடியும் என சொல்லப்படுகிறது. இந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.