பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்க இலவச மகளிர் பேருந்துகள் தமிழக அரசால் இயக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்பொழுது மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள பெண்கள் 25 கிலோ எடை கொண்ட சுமைகளை இலவசமாக எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி அரசு போக்குவரத்து கழக இயக்குனர்களுக்கு அனுப்பி இருக்கக்கூடிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கக்கூடிய பெண்கள் தங்களுடைய சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு நீண்ட தூரம் எடுத்துச் செல்ல வேண்டி இருப்பதாகவும் அந்த சுமைகளை பேருந்துகளை எடுத்துச் செல்லும் பொழுது அதிக கட்டணங்கள் கொடுக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற கோரிக்கைகளை களைவதற்காகவும் மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கக்கூடிய பெண்கள் தங்களுடைய பொருட்களை எளிமையாக சந்தைப்படுத்த தமிழக போக்குவரத்து துறை சார்பில் அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மேலான் இயக்குனர்களுக்கு தெரிவிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய மகளிர் சுய உதவி குழு அட்டையை வைத்திருக்கக் கூடிய மகள் இருக்கு மட்டும் பேருந்துகளில் 25 கிலோ எடையுள்ள சுமைகளை கட்டணம் இல்லாமல் எடுத்து செல்ல ரசீதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
A/C அல்லாத மற்ற அனைத்து நகர பேருந்துகளிலும் 25 கிலோ எடையுள்ள சுமைகளை 100 கிலோ மீட்டர் வரை இலவசமாக எடுத்து செல்லலாம் என்றும் தமிழக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு செல்லக்கூடியவர்கள் தாங்கள் செல்லக்கூடிய பேருந்துகளில் சுமைக்கு கட்டணமில்லா ரசீதை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த 25 கிலோ எடை கொண்ட கட்டணம் இல்லா சுமை என்பது மற்ற பயணிகளை இடையூறு செய்வதாகவோ அல்லது அதிக இடத்தை எடுத்துக் கொள்வதாகவோ அமைந்திருந்தால் அவற்றை பேருந்துகளில் அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களையும் பேருந்துகளில் எடுத்துச் செல்லக்கூடாது என தெரிவிப்பதோடு இதனை கட்டாயமாக கவனிக்க வேண்டும் என்று நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு அறிக்கையை வெளியிட்டு இருப்பதாகவும் இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.