டாஸ்மாக் தலைமையகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், பல தனியார் நிறுவனங்கள் இந்த முறைகேட்டில் நேரடியாக ஈடுபட்டுள்ளன என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பல தனியார் மதுபான நிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை புள்ளி விவரங்களை மாற்றியும் அரசுக்கு மோசடி செய்துள்ளன.
திட்டமிட்ட முறையில் நடைபெற்ற மோசடி
அமலாக்கத்துறை அறிக்கையில், மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் முக்கிய கூட்டாளிகள் இந்த முறைகேட்டில் நேரடியாக பங்கு பெற்றுள்ளனர். அதே நேரத்தில், டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்பதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே முக்கிய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கும் டெண்டர்கள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பார் உரிம டெண்டர்கள் வழங்கும் போது, கேஒய்சி (KYC) மற்றும் பான் (PAN) விவரங்கள் சரியாக இல்லாத விண்ணப்பதாரர்களுக்கே டெண்டர் வழங்கப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சி தகவலாக அமைகிறது.
மேலும், போக்குவரத்து, கட்டடம், உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என்பது அமலாக்கத்துறை அறிக்கையில் உள்ள முக்கியமான அம்சமாகும். மதுபான முறைகேடு தொடர்பாக மேலும் பல உயரதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த அறிக்கை வெளியானதற்கு பின்னர், அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதே தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. இந்த பெரும் ஊழல் தொடர்பாக தமிழக அரசு இன்னும் உண்மையான நடவடிக்கை எடுக்குமா? அல்லது மறைத்துவிடுமா? என்ற கேள்விக்கான பதில் இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது.
மதுவிலக்கு துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி மீது பண மோசடி தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த நிலையில், மதுபான கொள்முதல், விற்பனை முறைகேடு தொடர்பாக புதிய ரெய்டு நடத்தப்பட்டதால், இது அரசியல் மற்றும் சட்டரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.