கருணாநிதி நாணயத்தை திமுகவினர் தூக்கி வீசி விடுவார்களா? அன்புமணி பளார்!

Photo of author

By Vijay

கருணாநிதி நாணயத்தை திமுகவினர் தூக்கி வீசி விடுவார்களா? அன்புமணி பளார்!

Vijay

Updated on:

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசின் சமீபத்திய நடவடிக்கையை விமர்சித்து, ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூபாய் குறியீட்டான ₹ அடையாளம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக “ரூ” குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை திமுக அரசு ஒரு பெரிய மாற்றம் என விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.

ஆனால், திமுக அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் பிரச்சனைகளால் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். இதனை மறைக்கவும், மக்கள் கவனத்தை திருப்பவும், திமுக அரசு இத்தகைய நாடகங்களை அரங்கேற்றுவதாக அன்புமணி குற்றஞ்சாட்டுகிறார். இது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறுகிறார்.

ரூபாய் குறியீட்டான ₹ அடையாளம் சமீபத்தில் உருவாக்கப்பட்டதல்ல. இது 2010 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, திமுக அந்த அரசின் ஒரு பகுதியாக இருந்தது.

மேலும், ₹ அடையாளத்தை வடிவமைத்தவர் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார். 2010 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி, உதயகுமாரையும் அவரது குடும்பத்தினரையும் அன்றைய முதல்வர் கருணாநிதி தனது கோபாலபுரம் இல்லத்துக்கு அழைத்து பாராட்டியதாக வரலாறு குறிப்பிடுகிறது. அப்போது பெருமையாக கொண்டாடப்பட்ட இந்த ₹ அடையாளத்தையே திமுக அரசு தற்போது அரசாணை ஆவணங்களில் நீக்கியுள்ளது.

திமுக அரசு தனது அரசியல் நோக்கில் மக்களின் வரலாற்றையும், தனது முன்னாள் நிலைப்பாடுகளையும் மறந்து போயிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி, கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மத்திய அரசு ₹100 நினைவு நாணயத்தை வெளியிட்டது. மத்திய அரசு எளிமையாக நடத்தவிருந்த அந்த விழாவை, தமிழக அரசு மிகப் பிரமாண்டமாக கொண்டாடியது.

அந்த நினைவு நாணயத்தில் ₹ அடையாளம் இடம் பெற்றிருந்தபோதும், திமுக அரசு அதனை ஏற்றுக்கொண்டது. அதுமட்டுமல்ல, ரூ.4,470 விலையுள்ள அந்த நாணயத்தை திமுகவினர் ரூ.10,000க்கு வாங்கி லாபம் பெற்றனர்.

இப்போது, தனது ஆவணங்களில் ₹ அடையாளத்தை நீக்கியிருக்கும் திமுக, அதே அடையாளத்தைக் கொண்டுள்ள கருணாநிதி நினைவு நாணயங்களையும் நிராகரிக்குமா? இந்த கேள்விக்குத் திமுக அரசு பதிலளிக்க வேண்டும். அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதைத் தவிர்த்து, மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக திமுக அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.