தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், மாநில அரசு ரூ.2,000 கோடி நிதியை இழந்தாலும், இருமொழிக் கொள்கையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ், கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழக அரசு பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதில், மாணவர்களின் அடிப்படை கல்வியறிவை உறுதிசெய்யும் “எண்ணும் எழுத்தும்” திட்டம், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, தொலைதூரக் குடியிருப்புகளிலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்ல போக்குவரத்து வசதி, ஆசிரியர்களின் ஊதியங்கள், உயர்கல்வி வழிகாட்டி, மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தக் கூடிய கலைத் திருவிழா, கல்விச் சுற்றுலா, இணைய வசதி உள்ளிட்ட பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுத்துள்ளது. இதனால், ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும், ரூ.2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் தடையிட்டு வருகிறது. இருப்பினும், மாணவர் நலனுக்காக மாநில அரசு எந்தவிதத்திலும் பின்வாங்காமல், ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்கான நிதியை தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து வழங்கியுள்ளது.
தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், மாநில அரசு ரூ.2,000 கோடி நிதியினை இழந்தாலும், தனது கொள்கையில் உறுதியாக இருந்து, இருமொழிக் கொள்கையை காப்பாற்றும் உறுதியுடன் செயல்படுகிறது. தமிழ்நாட்டின் தன்மானத்தைக் காத்து நிலைநிறுத்தும் முதலமைச்சரின் முடிவுகளுக்கு தமிழக மக்கள் முழுமையாக ஆதரவு வழங்குகிறார்கள்.
எத்தனை தடைகள் வந்தாலும், உறுதியோடு முன்னேறும் தமிழக மக்களுக்கு பாரதிதாசனின் வரிகள் உரியவை:
“தமிழர்க்குத் தொண்டு செய்யும்
தமிழனுக்குத் தடை செய்யும்
நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்.”
இதனை தங்கம் தென்னரசு உவமையாக கூறியுள்ளார்.