பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ரயில்வே ஆள்தேர்வு வாரியத்தின் (RRB) ரயில் உதவி ஓட்டுனர் (Assistant Loco Pilot) தேர்வுகளுக்காக தமிழக மாணவர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அருகில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரயில்வே ஆள்தேர்வு வாரியம் நடத்தும் இரண்டாம் கட்ட கணினி முறைத் தேர்வுகள் மார்ச் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக மாணவர்களுக்கு ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா போன்ற பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் செயலாக இருப்பதால், இந்த அநியாயமான நடவடிக்கையை கண்டிக்கத் தக்கது எனக் கூறியுள்ளார்.
இந்த பணிக்கான முதற்கட்ட கணினி முறைத் தேர்வு கடந்த நவம்பர் 25 முதல் 29 வரை நடைபெற்றது. அதில் தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்வில் தமிழகத்தில் இருந்து 6,315 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர். அதற்காக கூட தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல், பிற மாநிலங்களில் மையங்கள் கொடுக்கப்பட்டிருப்பது நியாயமற்றது.
தமிழக தேர்வர்கள் திட்டமிட்டு அலைக்கழிக்கப்படுகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. ரயில் உதவி ஓட்டுனர் பணி என்பது தொடக்க நிலை வேலை. இதில் பங்கேற்க வேண்டிய மாணவர்கள், பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணித்து, அங்கு தங்கியிருந்து, தேர்வு முடிந்து திரும்ப வேண்டிய அவசியம் இல்லை. இது மாணவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக, நிதி வசதியற்ற மாணவர்களுக்கு இது பெரும் சிக்கலாக மாறும்.
இதனை சரிசெய்ய, தமிழக மாணவர்களுக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அருகில் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும். மாணவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த தவறான முறையை உடனடியாக திருத்த, மத்திய அரசு, ரயில்வே ஆள்தேர்வு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.