தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் கடிப்பதால் பலர் பாதிப்படைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் சென்னையில் உள்ள பூங்கா ஒன்றில் காவலாளியின் மகள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அந்த பூங்காவிற்கு அழைத்துவரப்பட்ட வளர்ப்பு நாயால் கடித்து குதறப்பட்ட அந்த பெண் குழந்தை படுகாயம் அடைந்திருக்கிறார். இந்த நிகழ்வானது அந்த பூங்காவை சுற்றியுள்ள இடத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆனது பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
அதன்படி, சென்னையில் உள்ள வளர்பு நாய்களுக்கு கட்டாயமாக உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவற்றை வெளியில் அழைத்து செல்லும் பொழுது வாய் மூடி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் புதிய விதி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் வீட்டில் வளர்க்கக்கூடிய நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்றும் வளர்ப்பு நாய்கள் யாராவது ஒருவரை கடித்துவிட்டால் அதற்கு உரிமையாளர்களே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சியின் உடைய இந்த விதிகளை பின்பற்றவில்லை என்றாலோ அல்லது இது குறித்த புகார்கள் எதுவும் மாநகராட்சிக்கு வந்தாலோ உரிமையாளர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.