ஹிந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில் மும்மொழிக்கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும் என பாஜக கருதுகிறது. அதாவது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஹிந்தி மொழியையும் கற்க வேண்டும் என்பதே பஜாகவின் நோக்கமாக இருக்கிறது. அதோடு, மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தினால் தான், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி பரபரப்பை கிளப்பினார். அதேசமயம், முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள், இந்த மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக சமீபத்தில் கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், “அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்கிற வித்தியாசமின்றி அனைத்து குழந்தைகளுக்கும் தரமான மற்றும் சமமான கல்விக் கிடைக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு தான் தமிழக பாஜக சார்பில் சமக்கல்வி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இதில், ஒரு கோடி பேர் கையெழுத்து என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது தமிழக மக்களின் பேராதரவுடன் களத்திலும், இணையதளம் மூலமும் 20 என்ற இலக்கை எட்டியுள்ளோம். எனவே, விரைவில் ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கை எட்டுவோம். மும்மொழிக் கல்வியை, நம் குழந்தைகள் படிக்கும் தமிழக அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வருவோம்” என டிவிட்டரிலும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நேற்று திருச்சியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை ‘திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை. கூட்டுக் களவாணிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய போறாங்களாம். கர்மவீரர் காமராஜர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை’ என காட்டமாக விமர்சித்திருக்கிறார்.