நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய். சினிமாவில் நடித்து கொண்டிருந்தபோது அரசியல்வாதிகளால் அவர் சந்தித்த பிரச்சனைகளும், அதனால் ஏற்பட்ட கோபமும்தான் விஜயை அரசியலுக்கு தள்ளியது. நாமும் அரசியல் அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே நம்மை சீண்ட மாட்டார்கள் என்பதே விஜயின் அரசியல் முடிவுக்கு காரணமாக இருக்கிறது.
அதேநேரம், அதிமுக, பாஜக பற்றி பேசாமல் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் விஜய். அவரின் கட்சி மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தபோது சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில் மிகவும் ஆவேசமாக பேசினார் விஜய். ‘அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?’ என பரபரப்பை உண்டாக்கினார். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிப்பேன் என்றும் பேசினார்.2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் எண்ணமாக இருக்கிறது.
எனவே, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக போன்ற கட்சிகளோடு அவர் கூட்டணி அமைப்பாரா இல்லை தனித்து போட்டியிடுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் நடக்கவுள்ளது.
இந்த கூட்டத்தில் 2 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரை, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. இதுபோக, 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என தொண்டர்களுக்கு விஜய் ஆலோசனை வழங்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.