தமிழகத்தில் அதிக வெயிலின் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சரியாக ஏப்ரல் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 17 வரை இந்த தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென திருவாரூர் மாவட்டத்தில் முழு ஆண்டு தேர்வு ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, திருவாரூர் மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படக்கூடிய ஆழி தேர் திருவிழா ஏப்ரல் ஏழாம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்று நடைபெற இருந்த முழு ஆண்டு தேர்வானது ஒத்திவைக்கப்படுவதாக திருவாரூர் மாவட்டம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
10 ஆம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுக்கு எப்பொழுதும் போல் பொது தேர்வுகள் நடைபெறும் என்றும் துவக்க பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற இருந்த முழு ஆண்டு தேர்வானது அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 8 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மாணவர்களின் பெற்றோர்கள் தேர்வு தேதிகளை குறித்து வைத்து அதற்கேற்றார் போல் தங்களுடைய பிள்ளைகளை தேர்வுகளுக்கு தயார்படுத்தும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.