ஏற்கனவே அதிமுகவில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இப்போது தனியாக செயல்பட துவங்கிவிட்டார். சட்டசபையில் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து அவர் செயல்படுவதில்லை. பழனிச்சாமி நடத்தும் எம்.எல்.ஏ. கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வது இல்லை.
இதுவரை 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். பழனிச்சாமி மீது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களை ஒருங்கிணைத்து மேலும் பல எம்.எல்.ஏக்களையும் தன் பக்கம் இழுத்து அதிமுக தலைமையை நாம் கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் செங்கோட்டையனுக்கு இருக்கிறது.
அதிமுக, பாஜக, சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் போன்ற எல்லோரையும் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க பழனிச்சாமி ஒப்புகொண்டால் அவரின் தலைமையில் அதிமுக. இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து அதிமுகவை உடைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். மேலும், ‘மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் செங்கோட்டையன் அவர்களுக்கு ஒய் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. நன்றி.. நன்றி’ என சமீபத்தில் மதுரையில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டது.
அதோடு, டாஸ்மாக் ஊழல் தொடர்பாக பேச அனுமதிக்கவில்லை என இன்று காலை அதிமுகவினர் வெளிநடப்பு செய்தபோது அவர்களோடு செங்கொட்டையன் செல்லவில்லை. மேலும், பேட்ஜை அகற்றிவிட்டு பேசினார். அதேபோல், அதிமுக அனைவரும் பதாகை ஏந்தி நின்றனர். செங்கோட்டையன் அந்த பதாகையை வாங்கவும் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகை செலவன் ‘செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதிமுகவில் எந்த ஒரு உட்கட்சி பிரச்சனையும் இல்லை. செங்கோட்டையன் பற்றி விரைவில் பழனிச்சாமி பேசுவார்’ எனவும் அவர் தெரிவித்தார்.