வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும் என நினைக்கிறார் அமித்ஷா. இதற்கு அர்த்தம் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என்பது இல்லை.. இந்திய ஜனநாயக கூட்டணி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என்பதே அமித்ஷாவின் திட்டமாக இருக்கிறது. ஆனால், பழனிச்சாமிக்கு இதில் விருப்பமில்லை. அதனால்தான் தயங்கி கொண்டிருக்கிறார்.
பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரனின் அமுமக ஆகிவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது அமித்ஷாவின் எண்ணம். ஆனால், இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. அதனால்தான் செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்து ‘அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். அதை நீங்கள் செய்துவிட்டால் உங்கள் தலைமையில் அதிமுக செயல்படும்’ என சொன்னதாக சொல்லப்படுகிறது.
அனைவரையும் ஒருங்கிணைப்பது பற்றி சில சீனியர் முன்னாள் அமைச்சர்கள் பழனிச்சாமியிடம் பேசினால் ‘அந்த பேச்சுக்கே இடமில்லை. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கவே முடியாது. அப்படி செய்யாவிட்டால் கட்சி பிளவு படும், தேர்தலில் தோற்றுப்போகும் என யார் சொன்னாலும் எனக்கு கவலையில்லை. அதனால் அவரும் பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன். இனிமேல் இது விஷயமாக என்னிடம் யாரும் பேச வேண்டாம்’ என உறுதியாக சொல்லிவிட்டாராம்.
பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோரை கட்சியில் சேர்க்கலாம். வேண்டுமானால் பன்னீர் செல்வத்தின் மகனுக்கு கூட சீட் தரலாம். ஆனால், பன்னீர் செல்வத்தை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என சொல்லியிருக்கிறார் பழனிச்சாமி. ஒருபக்கம், அதிமுகவை ஒருங்கிணக்கும் முயற்சியில் செங்கோட்டையனும் ஈடுபட்டிருக்கிறார். அதேபோல், சென்னையில் இருக்கும் அமித்ஷாவை எப்படியாவது சந்தித்து பேச வேண்டும் என பன்னீர் செல்வமும் முயற்சி செய்து வருகிறார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி பிடி கொடுக்காததால் அமித்ஷா நினைப்பது நடக்குமா என தெரியவில்லை.