கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் சி.பி.எஸ்.இ 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை வைத்துக்கொண்டு இதர தலைப்புகளை நீக்குவதாக மத்திய பள்ளிக் கல்வி வாரியம் இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.மேலும் இந்தியாவில் நிலவி வரும் இந்த அசாதாரண சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறைக்கப்பட்ட பாடங்களில் உள்ள தலைப்புகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெரிவிக்கலாம்.மேலும்
குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த தலைப்புகள் தேர்வுகளில் இடம்பெறாது என
சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.
இது குறித்து முன்னதாக மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் கொரோனாவால் நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வருவதால் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது.இதனை அடுத்து கல்வி
நிறுவனங்களிடம் ஆலோசனை பெறப்பட்டது.அதில் 1,500 பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றது.கற்றலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தின் முக்கியமான பகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு இதர பகுதியில் உள்ள தலைப்புகளை 30% வரை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்திருந்தார்.