தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி உயர்த்தி வழங்க வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளர் மூலம் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களாக இதற்காக போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 24ஆம் தேதி ஆன நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இதற்கான பதிலை வழங்கியிருக்கிறார்.
இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ் செந்தில்குமார் தெரிவித்திருப்பதாவது :-
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறிய, பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேர ஆசிரியர்கள் ஆக பணியமர்த்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பரிசீலனை செய்து வருவதாகவும் கூடிய விரைவில் இதற்கான நல்ல முடிவு வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கும் நிலையில், இந்த பதிலை நாங்கள் வரவேற்கிறோம் என செந்தில் குமார் அவர்கள் தெரிவித்திருக்கிறார். மேலும் தற்பொழுது பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரக்கூடிய 12,500 சம்பளமானது குடும்ப செலவை பராமரிக்க சிரமமாக இருக்கிறது என்றும் உடனடியாக பதவி உயர்வு வழங்கி காலமுறை ஓதியமானது வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 14 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர் பணியில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாகவும் இந்த 12 ஆயிரம் குடும்பங்களையும் முதல்வர் மு க ஸ்டாலின் எடுக்கக்கூடிய நல்ல முடிவு வாழவைக்கும் என்று நம்புவதாகவும் அப்படி பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணியமர்த்தும் பட்சத்தில் தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா எடுப்போம் என்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.