ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் குலதெய்வம் தான் ஆணிவேர். வம்சா வம்சமாக வழிபட்டு வரும் நமது குல தெய்வத்தை என்றைக்கும் நாம் மறக்கக் கூடாது. ஒரு குடும்பத்திற்கு மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் குலதெய்வத்தின் அருள் என்பது நிச்சயம் கிடைக்க வேண்டும். அவ்வாறு குலதெய்வத்தின் அருள் ஒரு குடும்பத்திற்கு இல்லை என்றால், அந்த குடும்பத்தில் தீராத பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். என்னதான் முயற்சி செய்தாலும் அந்த பிரச்சனைகளை தீர்க்கவே முடியாது.
குலதெய்வத்தின் அருளை பெற வேண்டும் என்பதற்காக பல விதமான வழிபாடுகளை செய்வார்கள். அதே போன்று சில வாஸ்து செடிகளையும் வளர்த்து வருவார்கள். குலதெய்வ கோவிலுக்கு வருடத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக சென்று வணங்க வேண்டும். ஒரு சிலர் என்னதான் அவரது குலதெய்வத்தை வணங்கி வந்தாலும், அவர்களது வீட்டில் கஷ்டம் என்பது இருந்து கொண்டே தான் இருக்கும்.
அதற்கு காரணம் அந்த குடும்பத்தில் இருப்போர் அல்லது அவர்களது முன்னோர்கள் ஏதேனும் ஒரு தவறான செயலை செய்து, குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகி இருப்பார்கள், அல்லது சாபத்திற்கு ஆளாகி இருப்பார்கள். இதனால் தான் அவர்கள் எத்தனை வழிபாடுகளை குலதெய்வத்திற்காக செய்தாலும், அவர்களுக்கு அதனால் எந்த ஒரு பலனும் கிடைக்காமல் இருந்திருக்கும்.
குலதெய்வத்தை மறக்காமல் வழிபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம், மாதம்தோறும் அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடுகளை செய்து தான் வருகிறோம். இருந்தாலும் எங்களது குடும்ப பிரச்சினைகள் தீரவில்லை, என்று நினைப்பவர்கள் இந்த ஒரு எளிய தீபத்தை ஏற்றி குலதெய்வத்தின் கோபத்தை குறைக்க இந்த ஒரு மந்திரத்தையும் கூறி வழிபடுவதன் மூலம் குலதெய்வத்தின் கோபம் மற்றும் சாபத்திலிருந்து விடுபடலாம்.
இந்த தீப வழிபாட்டை தினந்தோறும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் செய்ய வேண்டும். தீபம் ஏற்றுவதற்காக ஒரு சிறிய தட்டினை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தட்டின் மேல் ஒரு மண் அகல் விளக்கினை வைத்து, சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தில் ஒரு சொட்டு தேன் மற்றும் 3 அல்லது 5 மிளகினை போட வேண்டும்.
இவ்வாறு தீபம் ஏற்றி மனதார உங்களது குலதெய்வத்தை வேண்டிக் கொள்ள வேண்டும். “எங்களது முன்னோர்கள் அல்லது எங்கள் குடும்பத்தினர் என்ன தவறுகள் செய்திருந்தாலும் அதனை மன்னித்து அருள் புரிய வேண்டும்” என்று கூறி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக உங்களது குலதெய்வத்தை உங்களது வீட்டிற்கு அழைப்பதற்காக இந்த ஒரு மந்திரத்தையும் கூற வேண்டும்.
“ஓம் என் குலதெய்வம் வர வர
ஓம் வம் வம் உம் உம்
என் படி ஏறி வா வா
என் குல தெய்வமே..!”
என்ற மந்திரத்தை தீபம் ஏற்றிய பிறகு 18 முறை கூற வேண்டும். இவ்வாறு தினமும் வழிபாடு செய்து இந்த மந்திரத்தை கூறும் பொழுது, உங்களது குலதெய்வத்தின் கோபம் நீங்கி உங்களது இல்லத்திற்கு குலதெய்வம் வருகை புரியும். இதனால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் சிறிது சிறிதாக சரியாக தொடங்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் காண முடியும்.
குலதெய்வத்தை மறவாமல் வழிபட்டும் எனது பிரச்சனைகள் சரியாகவில்லை என்று நினைப்பவர்கள், இந்த ஒரு எளிய வழிபாட்டை தினமும் இரு வேளை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வருவதன் மூலம் நிச்சயம் உங்களது குலதெய்வத்தின் அருளை பெற முடியும். மேலும் உங்களது பிரச்சனைகளும் விரைவில் சரியாகிவிடும்.