பாமகவில் உச்சக்கட்டத்திற்கு சென்ற தந்தை-மகன் போட்டி: அதிகாரத்தை கையில் எடுக்க ராமதாஸ் போட்ட பக்கா பிளேன்
பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் அன்புமணி ராமதாஸ் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நிறுவனரும் மூத்த தலைவருமான டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணிக்கு நேரடி சவாலாக மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் பக்கம் சென்றுவிட்ட நிலையில் கட்சியை மீண்டும் முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில், அவர் வரும் ஜூலை 10 ஆம் தேதி கும்பகோணத்தில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதனுடன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை நேரில் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். இது, கட்சிக்குள் அன்புமணியின் தனிப்பட்ட செல்வாக்கை குறைக்கவும் தனக்கான முக்கியத்துவத்தை நிலைநாட்ட செய்யப்படும் நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது. இதன் மூலமாக வயதானாலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும் என்பதையும் நிரூபிக்கவே ராமதாஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
தந்தை மகன் மோதல் உச்சம்
சமீபகாலமாக அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையிலான மோதல் கட்சியை இரண்டு அணிகளாக பிளக்கக்கூடியளவுக்கு வளர்ந்துள்ளது.
அன்புமணி, பனையூரில் நடைபெற்ற கூட்டத்தில், “ராமதாஸ் குழந்தை போல் நடக்கிறார். அவரை மூன்று பேர் தங்கள் லாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள்,” என கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அவர் விமர்சித்ததை வைத்து, ராமதாஸ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சேலம் மேற்கு பாமக எம்.எல்.ஏ அருள் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கி அன்புமணி ராமதாஸ் அவர்களை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கார்த்தியும் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கி அருளை விமர்சித்துள்ளார். இந்நிலையில் இருவரும் மாவட்டங்களை பிரித்து, தனித்தனியாக தங்கள் தரப்புக்கு ஆதரவான கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதிகாரத்தின் கோலோச்சும் போர்…
உட்கட்சி விவகாரத்தால் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் தற்போது, மாம்பழம் சின்னம் யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அன்புமணி, இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகி, “நான் தான் கட்சியின் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்” என மனு அளித்துள்ளார்.
அதேவேளை, பாஜக மேலிடத்தின் ஆதரவு பெற முயற்சிக்கும் அன்புமணிக்கு எதிராக, ராமதாஸ் தொண்டர்களை நேரில் சந்தித்து, புதிய நியமனங்கள் மூலம் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்.
கும்பகோணம் கூட்டத்திற்கு பின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்
ஜூலை 10 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெறும் கூட்டத்தில்,
ராமதாஸ்
கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி
வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி
பல்வேறு மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதனைத் தொடர்ந்து, மருத்துவர் ராமதாஸ் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளார் என கூறப்படுகிறது.
பூம்புகார் மாநாட்டில் அன்புமணி?
அண்மையில் மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக நடைபெற்ற வன்னியர் இளைஞர் மாநாட்டை அன்புமணி வழி நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக பூம்புகார் மகளிர் மாநாட்டை அன்புமணியின் பங்கேற்பில்லாமல் சிறப்பாக நடத்த வேண்டும் என ராமதாஸ் தீவிரம் காட்டுகிறார்.
போட்டி கூட்டங்களால் பரபரப்பு
விழுப்புரம் கிழக்கு மாவட்டத்தில்,
ஒரு பக்கம் ராமதாஸ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதே நேரத்தில், அன்புமணியின் மூலமாக நியமனமான நிர்வாகிகள் திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் கூட்டம் நடத்தினர்.
இருவரும் ஒரே நாளில் கூட்டம் நடத்தியதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
நாளுக்கு நாள் தந்தை மகனுக்கிடையேயான அதிகாரப்போட்டி தீவிரமடைந்து வரும் சூழலில் கட்சியினர் இரு பிரிவாக பிரிந்து செயல்படும் நிலை உருவாகியுள்ளதால் கட்சியின் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.