பாமக கட்சியிலிருந்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் இன்று அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்குவதாக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரை
அருளின் நடவடிக்கைகள் கட்சி கட்டுப்பாட்டுக்கு எதிராக இருப்பதாக கூறி, பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்ததையடுத்து, அருளை அனைத்து கட்சிப் பொறுப்புகளிலும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கூட நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் – அன்புமணி மோதல் தீவிரம்
இது பாமகவில் நடக்கும் உட்கட்சி மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதற்கான முக்கிய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம், அன்புமணி, அருளின் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து, வேறு ஒருவரை நியமித்தார்.
இதற்குப் பதிலாக கட்சி நிறுவனர் ராமதாஸ், அருளை இணை பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்த்தினார்.
இதனால் கட்சி நிர்வாகத்தில் இரு அணிகளாக பிரிந்து வலுவான பதவிப் போட்டி தொடங்கியது.
சேலம் அருளின் விமர்சனங்கள்
அன்புமணி ஏற்பாடு செய்த ஆலோசனைக் கூட்டத்தில் அருள் பங்கேற்கவில்லை. நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதே நேரத்தில் மற்றொரு எம்எல்ஏவும் கட்சியின் கௌரவ தலைவருமான ஜிகே மணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த கூட்டத்தில், அன்புமணி “இருவரும் விரைவில் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்வோம்” என்று கூற, அருள் பின்னர் பதிலடி கொடுத்து அன்புமணி தரப்புக்கு அதிர்ச்சியை அளித்தார்.
அந்த பதிலடியில் “நான் இறந்துவிடவில்லை. இப்போதே கூட்டு பிரார்த்தனை வேண்டாம்!” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது அன்புமணியின் தலைமை பண்பு குறித்த விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.
கட்சிக்குள் அதிகாரப் போட்டி
அருள் தொடர்ந்து:
“அன்புமணிக்கு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை.”
“நிர்வாக நியமனம் மற்றும் நீக்கம் போன்றவை ராமதாஸ் தலைமையில் மட்டுமே சாத்தியமானவை.”
“அன்புமணி தற்போதைக்கு செயல் தலைவர் மட்டுமே, கட்சியின் தலைவர் அல்ல.” என பல்வேறு கருத்துகளை அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எதிராக வெளியிட்டார்.
கட்சி தலைமை பதிலடி
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்:
கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயல்பாடுகள்,
கட்சி மீது அவதூறான கருத்துகள்,
மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உத்தரவை மதிக்காமல் மன்னிப்பு கேட்க மறுத்தது என்பவற்றை காரணமாகக் கூறி,சட்ட விதி 30ன் கீழ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமகவுக்குள் பரபரப்பு
இந்த முடிவைத் தொடர்ந்து, ராமதாஸ் ஆதரவாளர்களின் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பானது இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சனையை மேலும் தீவிரமாகியுள்ளது. குறிப்பாக அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என அருள் மறுபடியும் வலியுறுத்தியுள்ள நிலையில், இது பாமகவுக்குள் இரட்டை தலைமை குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
இனி, அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு எதிராக ராமதாஸ் எந்த நடவடிக்கையை எடுக்கப் போகிறார்? பாமகவின் தலைமை அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதில் கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணைய முடிவு தான் சூழ்நிலையை தீர்மானிக்கப்போகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.