
2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் படம் வெளியானபோது அந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு அலை மக்களிடம் கிடைத்தது. குறிப்பாக அந்த படத்தில் குறிப்பிடப்பட்ட சில விஷயங்கள் பாட்டாளி மக்கள் கட்சியினரை குறிப்பதை போல இடம்பெற்றிருந்தது. உண்மைக்கதை என்று விளம்பரப்படுத்திய இப்படத்தின் கதையில் குறிப்பாக சம்பந்தமில்லாமல் வன்னியர் சமூகத்தை காட்சிப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் ஜெய் பீம் படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருவேளை படம் மட்டும் OTT தளத்தில் வெளியாகாமல் நேரடியாக திரையரங்குகளில் வந்திருந்தால் நிச்சயம் படத்தை ஓட விட்டிருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினரை ஜெய் பீம் படம் கடுப்பில் ஆழ்த்தியது.
ஜெய் பீம் ரிலீசான நேரத்தில் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். ஜெய் பீம் படத்தை பார்த்துவிட்டு மனதளவில் இந்த படம் என்னை நொறுக்கிவிட்டது. என்னால் ஜெய் பீம் பார்த்துவிட்டு நிம்மதியாக தூங்க முடியவில்லை. அப்படிப்பட்ட தாக்கத்தை ஜெய் பீம் எனக்குள் ஏற்படுத்திவிட்டது என்று பேட்டி கொடுத்தார் ஸ்டாலின்.
தற்போது ஜெய் பீம் போன்ற ஒரு சம்பவம் சிவகங்கையில் அஜித் குமார் என்னும் கோவில் காவலாளிக்கு நடந்துள்ளது. அஜித்குமார் லாக் அப் மரணம் பற்றியும், முதல்வர் ஸ்டாலின் பற்றியும் பேட்டி கொடுத்துள்ளார் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்கள். ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு என்னால் நிம்மதியாக 3 நாட்கள் தூங்க முடியவில்லை என்று அறிக்கை கொடுத்தீர்களே முதல்வர் அவர்களே, அதே துக்கம் இப்போது உங்கள் ஆட்சியில் என்னை தூங்கவிடாமல் தொண்டையை அடைக்கிறது.
ஜெய் பீம் படத்தை விட மிக மோசமாக காவல்துறை உங்கள் ஆட்சியில் நடந்துள்ளது. அதே மிளகாய்த்தூளை உங்கள் ஆட்சியின் கீழ் காவல்துறை பயன்படுத்தியுள்ளது. திரைப்படத்தை வைத்து பொய் பிரச்சாரம் செய்த கூட்டத்தை வைத்து தற்போது நீங்களே நிஜத்தில் அதே போன்ற சம்பவத்தை நிகழ்த்தி காட்டிவிட்டீர்கள் என்று முதல்வர் ஸ்டாலினை நேரடியாக தாக்கியுள்ளார் அய்யா ராமதாஸ்.