தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக கட்சியையும் தமிழ் நாட்டில் ஆட்சி செய்யும் திமுக கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து அரசியல் பேசி வருகிறார் விஜய்.
கொள்கை எதிரி பாஜகவுடனும் மற்றும் அரசியல் எதிரி திமுகவுடனும் எப்போதும் கூட்டணி இல்லை என்ற தன்னுடைய இறுதி நிலைப்பாட்டை அண்மையில் சில நாட்களுக்கு முன்னர் கட்சி மீட்டிங்கில் வெளிப்படையாக அறிவித்தார் விஜய். இதனால் திமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு விஜய் எப்போதும் செல்லமாட்டார் என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது. ஆனால் திமுக மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளை தனது பக்கம் இழுக்க ஆரம்பம் முதலே விஜய் வலை விரித்து வருகிறார்.
விசிக, பாமக, காங்கிரஸ், தேமுதிக போன்ற முன்னணி கட்சிகளை விஜய் தனது கூட்டணியில் இணைக்க ஆர்வம் காட்டி வருகிறார். தவெக கட்சியுடன் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தரப்போவதாக விஜய் வெளிப்படையாக அறிவித்தார். தற்போது யாரும் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர விருப்பம் தெரிவிக்காத போதிலும் தேர்தல் நேரத்தில் நிச்சயம் களம் மாறும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.
இந்நிலையில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் திமுகவை விட்டு வெளியேற முயற்சித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் கடந்த சில தேர்தல்களாகவே காங்கிரஸ் கட்சிக்கு திமுக மிக சொற்பமான தொகுதிகளையே கொடுத்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2029ஆம் ஆண்டு தேர்தலுக்குள் தமிழகத்தில் காங்கிரஸ் என்னும் கட்சியே இல்லாமல் போய்விடும்.
திமுக எப்போதும் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளையும் ஒதுக்காது, ஆட்சி அதிகாரத்திலும் பங்கு கொடுக்காது. அதே விஜய்யுடன் சேர்ந்தால் ஆட்சி மற்றும் அதிகாரத்திலும் பங்கு கிடைக்கும். நாம் விஜய்யுடன் பேரம் பேசி நிறைய தொகுதிகளையும் வாங்கலாம். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் விஜய்க்கு ரசிகர்கள் எண்ணிக்கை ஏராளம்.
அதனால் அந்த மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்காக விஜய்யை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நினைக்கிறார்கள். பீகார் மாநில தேர்தலில் ராகுல் காந்தி பிஸியாக இருப்பதால் அவர் பீஹார் மாநில தேர்தல் முடிந்து வந்த பிறகு இது குறித்து பேசலாம் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். எனவே காங்கிரஸ் தவெக கூட்டணி கூடிய விரைவில் முடிவாகி விடும் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேச ஆரம்பித்துவிட்டனர்.