நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,இயக்குனருமான சீமானை மிரட்டி வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி செய்தது தமிழ் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் வெளியான ஃபிரண்ட்ஸ், பாஸ் என்ற பாஸ்கரன் மற்றும் மீசைய முறுக்கு போன்ற படங்களில் நடித்தவர் தான் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னையில் திருவான்மியூரில் வசித்து வருகிறார்.இந்நிலையில் அவர் வீடியோவை வெளியிட்டு விட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் சமீபகாலமாக தன்னை ஒரு அரசியல் தலைவர் ஏமாற்றிவிட்டார் என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதற்காக அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இவரது குற்றச்சாட்டை எதிர்த்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இவரை எதிர்த்து விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் என்பவர் நடிகை விஜயலட்சுமியை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தார்.
அப்போது நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில் தனது உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு சீமான் கட்சியினர் தான் பொறுப்பு என்று பேசியிருந்தார். இவர்கள் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் என்றாவது ஒருநாள் என்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும் பேசியிருந்தார். இந்நிலையில் என்னுடைய சொந்த சமூகத்தை சேர்ந்த சீமானை எப்படி விமர்சனம் செய்யலாம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக ஹரி நாடார் விஜயலட்சுமியை எதிர்த்து பேட்டி அளித்திருந்தார்.
இதனையடுத்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் ஹரி நாடார் உள்ளிட்டோரின் அச்சுறுத்தலால் விரக்தியடைந்த நடிகை விஜயலட்சுமி சீமானை கைது செய்ய வேண்டும் என்று வீடியோ வெளியிட்டு விட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.இதனையடுத்து அவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்
அவர் தற்கொலை முயற்சி மேற்கொள்வதற்கு முன்னதாக வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது “இது என்னோட கடைசி வீடியோ, கடந்த நான்கு மாதங்களாக சீமானும் அவரது கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக மன அழுத்தத்தில் உள்ளேன், ரொம்ப மல்லுக்கட்டி வாழனும் என முயற்சித்தது எனது அம்மா மற்றும் அக்காவுக்காக தான், நேற்று முன்தினம் சீமானுக்கு ஆதரவாக ஹரிநடர் பேசியது என்னை ரொம்ப அசிங்க படுத்தியது. இதற்கு மேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது, எனது குடும்பத்தை விட்டுச் செல்கிறேன், சீமானை விட்டுவிடாதீர்கள், அவர் முன்ஜாமீன் எடுக்கவோ தப்பிக்கவோ விடக்கூடாது, நான் அதிக நாள் வாழ நினைத்தேன். ஆனால் அவர்கள் என்னை வாழ விடவில்லை. சீமான் மற்றும் ஹரிநாடாரை கைது செய்ய வேண்டும் என கண்ணீர் வடித்தபடி அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.