குழந்தைகளுக்காக தனது தாலியையே விற்று டி.வி வாங்கிக் கொடுத்துள்ள தாயின் செயல்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது முடக்கத்தினை நாடு முழுவதும் கடைப்பிடித்து வருவதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் இல்லாமல் முடங்கிப் போய் இருக்கின்றனர் மக்கள். இதனால் கல்லூரிகளும், பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பான முடிவுகள் இன்னும் சரியாக எடுக்கப்படவில்லை.
ஆகவே இந்தச் சூழலில் நன்றாகப் படிக்கும் மாணவர்களின் மன நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் வரும் செய்திகளில் தெரியவருகிறது. மேலும் ஆன்லைன் வகுப்புகள் செயல்படுவதற்கு பொருளாதார தேவை உறுதியாகிறது. அதனால் வசதியில்லாத கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வசதியில்லாத சூழல் நிலவி வருவதால், இந்த ஆன்லைன் வகுப்புகளை நடத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மாணவர்களுக்கு படிப்பதற்காக ஸ்மார்ட்போன் இலவசமாக கொடுத்து வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது. சில மாநிலங்கள் தொலைக்காட்சிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த திட்டமிட்டு வருகின்றன.
இதனடிப்படையில் கர்நாடக மாநிலமும் தொலைக்காட்சிகளில் வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் செய்தி வெளியான நிலையில், அம்மாநிலத்தில் உள்ள கடக் எனும் பகுதியில் வசித்து வரும் தாய் ஒருவர் தனது குழந்தைகளுக்காக தன்னுடைய தாலியை அடமானம் வைத்து டிவி வாங்கியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்தத்தாய் கஸ்தூரி கூறியதாவது, “எங்கள் குழந்தைகளின் ஆசிரியர்கள் டி.வி வாங்க வேண்டும் என வற்புறுத்தினார். ஆனால் எங்களிடம் அதற்கான பணம் இல்லை அதனால் எனது தாலியை அடமானம் வைத்து நான் குழந்தைகளுக்காக டிவி வாங்கி கொடுத்தேன்.
மேலும், எனது குழந்தைகள் தினமும் பக்கத்து வீட்டிற்கு சென்று டிவி பார்ப்பது வருத்தமாக இருந்ததால் எனது குழந்தைகளுக்காக தொலைக்காட்சி வாங்கினேன்” என அவர் தெரிவித்தார். மேலும் இந்தச் செயலானது, குழந்தைகளின் கல்விக்காக எதையும் செய்யத் துணியும் இந்தத் தாயின் செயலை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.