கேரள மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நேற்று வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் விமானத்தில்பயணம் செய்த 19 பேர் உயிரிழந்துள்ள சம்பவமானது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.மேலும் இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் ஒட்டுமொத்த நாடும் முடங்கி போயிருக்கும் இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துயர சம்பவத்திற்கு கேரளா மாநில அரசின் சார்பாக நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் சார்பாக கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ரூ. 10 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விமான விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.