கடுமையான சட்டங்கள் இல்லாததே பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது: அன்புமணி விளாசல்!

Photo of author

By Parthipan K

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம், போக்சோ போன்ற சட்டங்களின் மூலம் மிகக் கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

“வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், தீ குளித்து இறந்துள்ளார். மேலும் இறந்த அந்தப் பெண்ணின் சகோதரியான பள்ளி மாணவியையும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெண்களுக்கான பாதுகாப்பில் கடுமையான சட்டங்கள் எதுவும் இல்லாததே காரணமாக உள்ளது”.

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

“வேலூர் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

வேலூரில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில், 15 வயது மாணவியை குளிக்கும் போது செல்போனில் படம் எடுத்துள்ளார்கள், அதே பகுதியை சேர்ந்த சில கொடூரன்கள்.
பிறகு அந்த படத்தை காட்டி மிரட்டி வந்ததால் அந்தப் பெண் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதுடன், கடந்த ஜூன் 10ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக அந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொடூரன்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது நடந்து இருக்கையில், இறந்த அந்தப் பெண்ணின் இளைய சகோதரியையும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவரையும் போக்சோ சட்டத்தின் மூலம் சிறையில் அடைத்துள்ளனர்.

பாலியல் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களும் பாதிக்கப்பட்டவர்கள்.
இது கடந்த காலங்களில் பாலியல் குற்றங்களில் செயல்படுபவர்கள் மீது கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படாதது மறுக்கமுடியாத காரணமாக உள்ளது.

இந்த நிலை நீடித்தால் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு அச்சமில்லாமல் போய்விடுகிறது. மேலும் இது பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.

ஆகவே இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். கடுமையான தண்டனைகள் வழங்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இந்தக் கடுமையான தண்டனைகள் மூலமாகவே அச்சம் ஏற்பட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க செய்ய வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றங்களைத் தடுப்பதற்கு இந்த வழியைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை.

எனவே நான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ள படி, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனைகளை கொடுக்க சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.