செஞ்சுக்குறோம் செஞ்சுக்குறோம் நாங்களே செஞ்சுக்குறோம்-தண்ணீர் தட்டுப்பாட்டில் சென்னை மக்களின் புதிய முயற்சி
சென்னையில் வரலாறு காணாத தண்ணீர்ப் பஞ்சம் . ஹோட்டல்களில் மதிய உணவில்லை ஐடி கம்பெனிகளில் தண்ணீர் இல்லை. ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யக்கோருகின்றனர். ஏரிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்ததால் வந்த அவலம் தான் இது. எதிர்பார்த்த பருவமழையும் பெப்பே காட்டி விட கடலோர அடுக்குமாடிக் குடியிருப்புகள் தினம் தினம் காலியாகின்றன. ஆனால் கடந்த இருபது நாட்களாய் சென்னை தெற்குப் பகுதி குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கத்தில் நாளுக்கு நாள் வலுக்கிறது ஏரி காப்போம் ஏரி காப்போம் சிட்லபாக்கம் ஏரி காப்போம் எனும் முழக்கம்.
தங்களின் வாழ்வாதாரமான சிட்லபாக்கம் ஏரியைக் காக்க 4 வயது சிறுவரில் ஆரம்பித்து 80 வயது இளைஞர் வரை உழைக்கின்றனர். சிட்லபாக்க்கம் ரைசிங் என்ற தன்னார்வ அமைப்பு முன்னெடுத்த இந்த ஏரி தூர் வாரும் நமக்கு நாமே உத்தி இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த மூன்று நான்கு வருடங்களாய் பருவமழைக் காலத்தில் தெருவெல்லாம் வீடெல்லாம் சேலையூர் ஏரியின் உபரி நீரால் நிரம்பி அவதிப் பட்டு வந்த சிட்லபாக்கம் இன்று தண்ணீர் இன்றித் தவிக்கிறது . இனியும் அரசை நம்பிப் பயனில்லை என்று சிட்லபாக்கம் ரைசிங் குழுவினர் தானே களத்தில் இறங்கினர்.
முகப்புத்தகத்தில் விடப்பட்ட அழைப்புகளும் பதிவிட்ட வீடியோக்களும் நிழற்படங்களும் ஆர்வத்தைத் தூண்ட இன்று அந்த ஊரே ஏரியை தூர்வார இறங்கியிருக்கிறது. அதிகாலை 6 மணி முதல் வேலை ஆரம்பமாகிறது. அலுவலகம் செல்வோர் 8 மணியுடன் முடித்துக் கொள்ள மீதி நேரங்களில் பெண்களும் பணி ஓய்வு பெற்றவர்களும் தொடர்கின்றனர் பிளாஸ்டிக் பாட்டில்கள் பைகள் அனைத்தும் அகற்றப் படுகின்றன. இத்துடன் கருவேல மரங்களும் அழிக்கப்பட மீட்கப் படுவோம் என்ற ஆனந்தத்தில் இருக்கிறது எங்கள் ஏரி . சிட்லபாக்கம் ரைசிங் குழுவினரின் கோஷமே
ஏரி காப்போம் ஏரி காப்போம் சிட்லபாக்கம் ஏரி காப்போம் …
தூர்வாரு தூர்வாரு சீக்கிரமாத் தூர்வாரு
செஞ்சுக்கிறோம் செஞ்சுக்கிறோம் – நாங்களே செஞ்சுக்கிறோம் ….
இவ்வாறு சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளும் மீட்கப்படின் சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லவே இல்லை இனி வரும் காலங்களில் .
சிட்லபாக்கம் மக்கள் காத்திருக்கின்றனர். அரசியல்வாதிகளே ஓட்டுக் கேட்க வாருங்கள். அப்போது செஞ்சிருவோம் செஞ்சிருவோம் உங்கள வச்சி செஞ்சிருவோம்.
இதுவரை ஆண்ட மற்றும் தற்போது ஆளும் எந்த அரசியல் கட்சியும் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலும் சரியான நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் விட்டதால் தான் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீர் வீணாக கடலில் கலந்து தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இனியும் நீர் மேலாண்மை பற்றி இந்த அரசியல்வாதிகள் சிந்திப்பார்களா என்ற நம்பிக்கையில்லாமல் சென்னை சிட்லபாக்கம் பகுதி மக்கள் தானாகவே ஏரியை தூர் வாரும் செயலில் இறங்கியது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க எங்களது News4 Tamil முகநூல் பக்கத்தையும் ட்விட்டர் பக்கத்தையும் பின்தொடருங்கள்.