தகுந்த புள்ளிவிவரங்களுடன் இடைவிடாமல் திமுகவை விரட்டி அடிக்கும் பாமக

0
191

தகுந்த புள்ளிவிவரங்களுடன் இடைவிடாமல் திமுகவை விரட்டி அடிக்கும் பாமக

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டு திமுகவின் வெற்றியை பறித்தது மற்றும் தற்போது மீண்டும் தமிழக சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திமுக ஆட்சியை பிடிக்க விடாமல் தடுத்தது என திமுகவிற்கு பாமக தொடர் சோதனைகளை கொடுத்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது கடந்த காலத்தில் மைனாரிட்டியாக இருந்த திமுகவிற்கு ஆதரவளித்து ஆட்சியில் தொடர உதவியது குறித்து பழைய நினைவுளை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில்
தப்பித்த மைனாரிட்டி திமுக அரசு!
என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது.

பழைய செய்தி தான் -இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக என ஆரம்பிக்கும் அந்த பதிவில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

2006-11 காலத்தில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான சொற்றொடர் மைனாரிட்டி ஆட்சி என்பதாகும். திமுக அரசு பற்றி அப்போதைய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா பேசும் போதெல்லாம் மைனாரிட்டி அரசு என்றே விளிப்பார். இது திமுக தலைவரும், முதலமைச்சருமான கலைஞருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. ஆனாலும், அவரது அரசு ஐந்தாண்டுகள் தாக்குபிடித்தது. அதற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவு தான்.

2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 96 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுகவுக்கு 22 இடங்கள் தேவைப்பட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 34 இடங்களிலும், பா.ம.க. 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. காங்கிரஸ் ஆதரவளித்தால் தான் திமுக ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை. ஆனால், மத்திய அரசில் திமுகவுக்கு நாங்கள் அமைச்சர் பதவி கொடுத்ததைப் போல நீங்களும் அமைச்சர் பதவி கொடுத்தால் தான் அரசுக்கு ஆதரவளிக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிவிட்டனர்.

ஆனால், அமைச்சரவையில் யாருக்கும் பங்கு தர திமுக தயாராக இல்லை. அந்த நேரத்தில் தான் திமுகவுக்கு பா.ம.க. கை கொடுத்தது. 2006 தேர்தலில் கலைஞரை முதலமைச்சராக்குவோம் என்று கூறி தான் கூட்டணிக்கு வாக்கு கேட்டோம், எனவே திமுகவை ஆட்சியில் அமர்த்துவது தான் சரி என்ற எண்ணத்துடன் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தேன். அதற்கான ஆதரவு கடிதத்தையும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் ஆளுனரிடம் அளித்தனர். அதனால் வேறு வழியின்றி காங்கிரசும் நிபந்தனையின்றி திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டியிருந்தது.

ஐந்தாண்டு கால ஆட்சியில் திமுகவுக்கும், பா.மகவுக்கும் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக அணியிலிருந்து பா.ம.க. விலகிய போதிலும் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளவில்லை.

திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவளித்ததால் பா.ம.க. மீது காங்கிரஸ் கட்சிக்கு உள்ளூர கோபம் ஏற்பட்டது. ‘‘நீங்கள் மட்டும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் எங்களுக்கு சில அமைச்சர் பதவிகள் கிடைத்திருக்கும். ஆனால், நீங்கள் தான் அதை கெடுத்து விட்டீர்கள். உங்களுக்கு அமைச்சர் பதவி தேவையில்லாமல் இருக்கலாம். எங்களுக்கு கிடைப்பதையும் தடுத்து விட்டீர்களே நியாயமா?’’ என சில காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டனர். ஆனாலும் பா.ம.க. அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த போதிலும், அதன் தவறுகளை சுட்டிக்காட்ட பாட்டாளி மக்கள் கட்சி தயங்கியதே இல்லை. அந்தக் காலத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டது பா.ம.க. தான். அந்தக் காலத்தில் திமுக அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்றது பாட்டாளி மக்கள் கட்சி தான்.

ஆக…. கூட்டணி தர்மத்தை பாதுகாப்பதாக இருந்தாலும், மக்கள் பிரச்சினைகளுக்காக உண்மையாக போராடுவதாக இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணை பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை பதிவு செய்கிறேன் என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleநாடாளுமன்றத்தில் தனி ஒருவனாக கெத்து காட்டிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்
Next articleபிரபலமான திரையரங்குகளுக்கு சீல் வைப்பு! மாநகராட்சி நிர்வாகம் அதிரடி