அரசு கேபிள் டி.வி.யின் இலவச ‘செட்டாப் பாக்ஸ்’களை பயன்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல், டிஜிட்டல் ஒளிபரப்பிற்காக இலவசமாக ‘செட்டாப் பாக்ஸ்’கள் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறை அமல்படுத்தியதும் அரசு டிஜிட்டல் கேபிள் டி.வி.க்கு சந்தா தொகை அதிகமாக இருந்ததால் சிலர் தனியார் டிஜிட்டல் நிறுவனத்திற்கு மாறிவிட்டனர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது தனியாரைவிட குறைந்த கட்டணத்தில் தமிழக அரசு கேபிள் டி.வி. இணைப்புகளை வழங்கி வருகிறது. செட்டாப் பாக்ஸ், ரிமோட், பவர் அடாப்டர் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
அரசு வழங்கிய இலவச செட்டாப் பாக்ஸ்கள் என்பது, பொதுமக்கள் கேபிள் ஒளிபரப்பினை மாத சந்தா கட்டணம் செலுத்தி பார்ப்பதற்கு மட்டுமே தவிர அது அவர்களுக்கு சொந்தமாகாது. எனவே, அரசு வழங்கிய இலவச செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் சிலர் பயன்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பதால் தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது. அதனால் செட்டாப் பாக்ஸ்களை பொது மக்கள் பயன்படுத்தாமல் இருந்தால் செட்டாப் பாக்ஸ் மற்றும் ரிமோட், பவர் அடாப்டர் உள்ளிட்டவைகளை அந்தந்தப் பகுதில் உள்ள அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
மேலும் ‘செட்டாப் பாக்ஸ்’ பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தாலோ அல்லது ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு குடிபெயர்ந்து இருந்தாலோ, ‘செட்டாப் பாக்ஸ்’களை ஆபரேட்டர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.