தமிழக சட்டப்பேரவையில் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் உருவப்படத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் ராமசாமி படையாச்சியார் மணி மண்டபம் விரைவில் திறப்பப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
வன்னிய சமூகத்தின் பெரும் தலைவர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சகுப்பத்தில் பிறந்தவர், பள்ளிப் படிப்பை முடித்த காலத்திலேயே இவர் சுதந்திர போராட்டத்தில் மிகுந்த தீவிரத்தோடு ஈடுபட்டவர்.
ஆரம்பத்தில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட இவர் நாட்டின் விடுதலைக்கு பின்னர் வன்னிய சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார், மேலும் தமது நோக்கத்தை நிறைவேற்ற 1951-ஆம் ஆண்டு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை தொடங்கினார்.
1952-ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் அவரது கட்சி வேட்பாளர்கள் 19 சட்டமன்ற தொகுதிகளிலும், 4 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி கண்டனர். 1954-ஆம் ஆண்டு காமராஜர் தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற போது, அவருக்கு ஆதரவை தெரிவித்த ராமசாமி படையாச்சியார், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை காங்கிரசில் இணைத்தார்.
இதனையடுத்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பொறுப்பு ஏற்றார். 1980, 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி கண்ட ராமசாமி படையாச்சியார், 1992-ஆம் ஆண்டு காலமானார்.
சுதந்திர போராட்ட தியாகியும், தமிழக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின் உருவப்படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு முடிவு எடுத்தது.
ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில், மகாத்மா காந்தியடிகள்,ராஜாஜி, திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். முத்துராமலிங்கத் தேவர், பெரியார், அம்பேத்கர், காயிதே மில்லத், ஜெயலலிதா ஆகிய 11 பேரின் படங்கள் உள்ளன. இந்நிலையில் 12 வது படமாக ராமசாமி படையாச்சியார் படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், வாழும்போதே வரலாறாக வாழ்ந்த மரியாதைக்குரியவர் ராமசாமி படையாச்சியார் என்றார். நாட்டுக்காகவும், சமுதாயத்திற்காகவும் உழைத்த நல்லவர்களை சிறப்பிப்பதில், அரசும் முன்மாதிரியாக திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.
ராமசாமி படையாச்சியாருக்கு புகழாரம் சூட்டிய முதலமைச்சர், கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1.5 ஏக்கர் அரசு நிலத்தில் ராமசாமி படையாச்சியாருக்காக கட்டப்பட்டு வரும் மணி மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்றும் கூறினார். படத்திறப்பு விழாவிற்கு பிறகு அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுமார் 15 நிமிடங்க்ள ஆலோசனை நடத்தினார்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.