கர்நாடக காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து பெங்களூரில் உள்ள தனது சொந்த வீட்டில் தினேஷ் குண்டுராவ் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே அடுத்த 10 நாட்களுக்கு நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்கிறேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் மேலும் அறிகுறியில்லாத கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன்.விரைவாக குணமடைந்து மீண்டும் உங்களை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் இதனையடுத்து தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து பேசுவதற்காக இரு தினங்களுக்கு முன் சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்திலே காங்கிரஸ் கட்சி சார்பாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ,இளங்கோவன்,திருநாவுக்கரசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுதுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தி சென்றுள்ளார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.
இந்நிலையில் தினேஷ் குண்டுராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொது செயலாளர் துரைமுருகன்,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என தினேஷ் குண்டுராவை சந்தித்த அனைவரும் தங்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்க கூடும் என்ற அச்சத்தில் தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.