காதல் விவகாரத்தில் காவல் அதிகாரி வெட்டிக்கொலை:! அதிரவைக்கும் பின்னணி!
செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழையசீவரம் பகுதியை சேர்ந்தவர் இன்பரசு என்பவர். இவர் சென்னை புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று அவருடைய நண்பர்கள் அவருடைய தொலைபேசி எண்ணிற்கு போன் செய்து அருகில் உள்ள வயல் வேலைக்கு வருமாறு கூறி உள்ளனர்.இதனையடுத்து நண்பர்களின் அழைப்பை ஏற்று இன்பரசு என்பவர் இருசக்கர வாகனத்தில் அந்த பகுதிக்கு தனியாக சென்றுள்ளார்.ஆனால் அங்கு ஏற்கனவே காத்திருந்த மர்ம கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது.
பழைய சீவரம் ஊருக்கு வெளியே சாலையோரத்தில் இன்பரசனின் உடலை பார்த்த மக்கள்,காவல்துறையினருக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.தகவலின்பேரில் வந்த செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் மற்றும் பாலூர் காவல்துறையினர்,
இன்பரசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.பின்பு இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில்,
இன்பரசுவின் அண்ணன் அன்புரசும்,அப்பகுதியை சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர் பெருமாள் என்பவரின் மகளும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் பெருமாள் வீட்டிற்கு பிடிக்காத நிலையில் அவர்களுக்குள் பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த பகுதியில் நடந்த ஒருவரின் இறுதி சடங்கில் பங்கேற்ற இன்பரசன் அண்ணன்களான அன்பரசன் மற்றும் சிலம்பரசன் ஆகியோரை,அப்பெண்ணின் சகோதரன் வரதராஜன் தாக்கியுள்ளார்.இதனைக் கேள்விப்பட்ட இன்பரசன் வரதராஜனிடம் தகராறு செய்துள்ளார்.இதனால் இரு தரப்பிற்குமிடையே மேலும் விரோதம் முற்றியது.
இதனை காரணமாக வைத்தும், தனது அக்கா உடனான அன்பரசன் காதலுக்கு,
இன்பரசன் உடந்தையாக இருப்பதன் காரணத்தாலும்,
அப்பெண்ணின் அண்ணன் வரதராஜன் கூலிப்படையை ஏவி இன்பரசனை வெட்டி படுகொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து வரதராஜனை கைது செய்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.