2-ம் கட்ட கொரோனா அலை: எதிர்கொள்ள அரசு தயார்..! அமைச்சர் விஜயபாஸ்கர்

0
61

இரண்டாம் கட்ட கொரோனா அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளவும் அரசு தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் செலவில் 16 சிடி ஸ்கேன் (CT scan) கருவிகளுடன் கூடிய கொரோனா குணமடைந்ததற்குப்பின் சிகிச்சை பெறக் கூடிய வார்டுகளை (Post Covid Centre) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,
தமிழகத்தில் முப்பரிமாண முறையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாகவும் இதனால் 90% பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறினார். மேலும், கொரோனாவில் 2-ம் கட்ட அலை தமிழகத்திற்கு வந்தாலும் அதை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக உள்ளது என அமைச்சர் கூறினார். கொரோனா அச்சுறுத்தல் காலத்திலும் களத்துக்கு சென்று அரசு பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

தமிழக அரசு முன்கூட்டியே கனித்ததால் மாநிலத்தில் கொரோனா, டெங்கு உள்ளிட்ட நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. மேலும், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி ஒத்துழைத்தாலே கொரோனாவின் எந்த அலை வந்தாலும் தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.