கிருஷ்ணகிரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 58). இவர் அதே கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து இவரது தந்தை ராமு செட்டியார் (வயது 88), தாயார் சீதாலட்சுமி (வயது 80) ஆகிய இருவருக்கும் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து அவர்களும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர்கள் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, கிராம பஞ்சாயத்தில் பொதுமக்கள் ஒன்றிணைந்து நாளை (அக். 7) முதல் 10 நாட்களுக்கு (அக். 16) முழு ஊரடங்கு கடைபிடிப்பதாக முடிவு செய்துள்ளனர். முழு ஊரடங்கு கடைப்பிடிப்பதன் காரணமாக அனைத்து கடைகளும் மூட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தண்டோரா மற்றும் துண்டுபிரசுரங்கள் மூலம் ஊராட்சி முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது.