பெற்றோர்கள் கவனத்திற்கு! தனியாா் பள்ளிகளில் 2ம் கட்ட இலவச சேர்க்கை..!

0
101

தனியாா் பள்ளிகளில் எஞ்சியுள்ள இடங்களுக்கு அக்.12ம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் 25% இடங்களில் ஏழைக் குழந்தைகள் இலவசமாக சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவா்கள் 8 ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அதன்படி நடப்பாண்டில் (2020 – 21) 10,000க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளில் 1,15,763 இடங்கள் உள்ளன. இதற்கு 86,326 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

இதையடுத்து விண்ணப்பித்தவா்களின் சான்றிதழ்களை சரிபாா்க்கும் பணிகள் முடிக்கப்பட்டு தற்போது மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. பள்ளிகளில் உள்ள இடங்களைக் காட்டிலும் அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருந்த பள்ளிகளில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், தற்போது தனியாா் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள இடங்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் தீரஜ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது எஞ்சியுள்ள இடங்கள் குறித்த பட்டியல், தகவல் பலகையில் அக். 10ம் தேதி ஒட்ட வேண்டும். இதையடுத்து குழந்தைகளின் பெற்றோா் இணையதளம் வழியாக அக். 12ம் தேதி முதல் நவ. 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதைத் தொடா்ந்து தகுதியான விண்ணப்பங்கள், தகுதியற்ற விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையில் நவ. 11ம் தேதி வெளியிட வேண்டும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தை பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். எஞ்சியுள்ள இடங்களைக் காட்டிலும் கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால் நவ. 12ம் தேதி குலுக்கல் முறையில் சேர்க்கைக்கான குழந்தைகளைத் தேர்வு செய்து அவர்களின் பட்டியலை பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.

அதோடு பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் அந்தப் பட்டியலை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும் இந்த 2ம் கட்ட இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Previous articleAxis Bank-ல் 100க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்! டிகிரி முடித்து இருந்தால் போதும்!
Next articleஅதிமுக கட்சியில் அதிகாலை வரை நடந்த ஆலோசனைக் கூட்டம்! முதலமைச்சர் வேட்பாளர் யார்?