சென்னை, காரப்பாக்கத்தில் இயங்கி வரும் டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரெனெ தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கந்தன்சாவடியை அடுத்த காரபாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், அந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து காரணமாக காரப்பாக்கம் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணம் மின்சாரம் கசிவா..? அல்லது மர்மநபர்களின் சதிச்செயலா..? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தீ முழுவதும் அணைக்கப்பட்டுள்ள நிலையில் சேதம் குறித்து மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தீயில் கருகி எரிந்த பொருட்களின் மதிப்பு பல கோடிகளில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.