கோவை மாநகராட்சியில் சில முக்கிய நிறுவனங்கள் சரியாக சொத்துவரி கட்டாததால் கோவை மாநகராட்சி ஆணையர் திடீர் என்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் அந்த அனைத்து முக்கிய நிறுவனங்களும் கலக்கம் அடைந்துள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட, எல்லை கோட்டிற்குள் இருக்கும் சில முக்கிய நிறுவனங்கள் சொத்து வரி செலுத்துவதற்கு கால தாமதம் காட்டி வருவதால், அச்செயலை கண்டித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்போது கோவை மாவட்டத்தில் பல தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் அதிக அளவில் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. அதில் அதிகமான அளவு வரித்தொகையை நிலுவையில் வைத்துள்ள 100 நிறுவனங்களின் பெயரை வெளியிட்டுள்ளது கோவை மாநகராட்சி.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் சரியாக வரித்தொகையை செலுத்தாததால் கோவை மாநகராட்சிக்கு அதிக அளவில் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த 100 இடங்களில், முக்கிய கல்வி நிறுவனங்களின் பெயர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.என்.ஆர் சன்ஸ் குழுமம் 3,21,88,000 ரூபாயும், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 1,50,49,000 ரூபாயும், வி.எல்.பி கல்வி குழுமம் ஒரு கோடியே 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும் என பல முக்கிய நிறுவனங்கள் வரித் தொகையை செலுத்தவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கே.ஜி.ஐ.எஸ்.எல் அறக்கட்டளை, அமிர்தா வித்யாலயா, பி.எஸ்.ஜி.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, ஹிந்துஸ்தான் கல்லூரி, பாரதிய வித்யாபவன், என்.ஜி.பி. கல்லூரி, அவிலா கான்வென்ட் உள்பட சில முக்கிய நிறுவனங்களின் பெயரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு இந்த நிறுவனங்கள் அனைத்தும் சொத்து வரியை சரிவர செலுத்தாமல் காலதாமதம் காட்டிவருவதால், இச்செயலை கண்டித்து மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் அவர்களின் அதிரடி நடவடிக்கையால் அனைத்து நிறுவனங்களும் தற்போது கலக்கம் அடைந்துள்ளது.