கல்லூரிகள் திறப்பது குறித்து யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
123

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை யூஜிசி தற்போது வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்களின் செமஸ்டர் தேர்வு இணைய வழியில் நடத்துவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை யூஜிசி தற்போது வெளியிட்டுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

  • கல்லூரிகளுக்கு வரும் அனைவரின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும்.
  • கல்லூரிகளுக்கு வரும் அனைவரும் முகக் கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை 50 சதவீத வருகைப் பதிவுடன் திறக்கலாம்.
  • சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம். தேவைப்பட்டால் வாரத்தில் 6 நாட்கள் கூட வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம்.
  • மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் ஆரோக்கிய சேது அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
  • மத்திய மற்றும் மாநில அரசுகளால் பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே கல்லூரிகளை திறக்கலாம்.
  • கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என யாரையும் கல்லூரிகளுக்குள் வர அனுமதிக்கக்கூடாது.
  • தேவைப்பட்டால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்கவும் தேர்வு செய்யலாம். கல்வி நிறுவனங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
  • தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு, சுகாதாரம், உணவு, நீர் போன்றவற்றை முறையாக ஏற்பாடு செய்யவேண்டும்.
  • சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.
  • சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத கல்லூரி வளாகங்களில் எந்த திட்டங்களையும் செயல்படுத்த கூடாது.
  • உடல்நிலை பாதிக்கப்பட்ட ஊழியர்கள், வயது முதிர்ந்த, கர்ப்பிணி பணியாளர்களை முன்களப்பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்.
  • கல்லூரி விடுதிகள் தவிர்க்க முடியாத கட்டாய சூழலில் மட்டுமே திறக்கப்பட வேண்டும். கல்லூரி விடுதிகளில் அறைகளை பகிரக் கூடாது.
  • புத்தகங்கள், பிற கற்றல் பொருட்கள் மற்றும் சாப்பிடக்கூடிய பொருட்களை பகிர்வதை ஊக்கப்படுத்தக்கூடாது.
  • பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான நிலைகளை பராமரிக்க கல்வி நிறுவனங்கள் தயாராக இருக்கிறதா..? என்பதை சுகாதாரத் துறை உறுதி செய்ய வேண்டும்.
  • கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் கல்லூரிகளை திறக்க அனுமதி இல்லை.

மத்திய அரசின் நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் வகுப்புகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற உயர்கல்வி நிறுவனங்கள் மாநில அரசுகளின் ஆலோசனைப்படி வகுப்புகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleசுருங்காத தோலும், மங்காத கண்களும், பெருக்காத இடுப்பும், தேயாத எலும்பும் பெற இதை சாப்பிடுங்க!
Next articleதடையை மீறி தொடங்கிய வேல் யாத்திரை! திருத்தணியில் போலீஸ் குவிப்பு!