ஆட்சியில் பங்கு கேட்கும் விசிக! உடைகிறதா திமுக கூட்டணி? கலக்கத்தில் அறிவாலயம்
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தற்போதைய அரசியல் சூழலை உணர்ந்து ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் கேட்பது போல திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சியும் ஆட்சியில் பங்கு கேட்பதாக கூறப்படுகிறது.இதனை உறுதி செய்யும் விதமாக தான் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சி ஆதரவாளர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளது.
அதாவது 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் திமுக மற்றும் அதிமுக என இரு தரப்பினரும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்கள். ஆனால் இந்த இரு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற எந்த கட்சிகளும் திமுக,அதிமுக கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஆரம்பிக்கவில்லை.இதற்கு காரணமாக கூட்டணி கட்சிகள் கேட்கும் நிபந்தனைகளுக்கு திமுக மற்றும் அதிமுக கட்சிகள் செவி கொடுக்காமல் தவிர்த்து வருவது தான் என்று கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவில் முக்கிய தலைவர்கள் இல்லாத காரணத்தால் தனித்து போட்டியிட்டால் ஆட்சியை பிடிப்பது கடினம் என்பதை உணர்ந்து திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு அதிகமான தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வேண்டும் என்றும்,துணை முதல்வர் பதவி அல்லது ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்றும் தொடர் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இதில் குறிப்பாக ஆளும் கட்சியான அதிமுகவின் கூட்டணியில் உள்ள பாமக தான் இந்த கோரிக்கையை முதலில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.அதற்கு காரணமாக நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வட மாவட்டங்களில் பாமகவின் வாக்கு வங்கியால் தான் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடிந்தது என்ற காரணத்தையும் கூறுகின்றனர். பாமகவை போலவே அதிமுகவின் கூட்டணியில் உள்ள பிஜேபி கட்சியும் ஆட்சியில் பங்கு கேட்பதாக சொல்லப்படுகிறது.
அதே போல் பாமகவை விட தங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என்று பாஜகவும்,பாஜகவை விட தங்களுக்கு அதிக தொகுதிகளையும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடும் தர வேண்டும் என்று பாமக தரப்பும் கோரிக்கைகளை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இதே போல் அதிமுகவின் கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான தேமுதிக தங்களுக்கு 60 தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.அவ்வாறு இல்லையென்றால் கூட்டணியை விட்டு வெளியேறி மூன்றாவது அணி அமைப்போம் என்றும் கூறுகிறார்களாம்.
இவ்வாறாக ஆளும் அதிமுகவின் கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகள் தங்களது கோரிக்கைகளை வைக்க அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எடப்பாடி தரப்பு குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
மறுபுறம் திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு அதிகமான தொகுதிகளை கேட்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.குறிப்பாக காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளுக்கு மேல் கேட்டுள்ளதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியானது சொந்த சின்னத்தில் போட்டியிடவும், தங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் திமுகவை வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் விசிகவின் ஆதரவாளரான செங்கொடி என்பவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.அவர் பதிவிட்டுள்ளதில்,”கோட்டையில் முடிவு எடுக்கும் சக்தியாக விசிக வலிமை பெரும்” என்று பதிவிட்டுள்ளார்.இதனால் திமுக தலைமைக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வரவுள்ள தேர்தலில் விசிகவுக்கு அதிகமான சீட் தரவில்லை அல்லது ஆட்சியில் பங்கு என்ற உத்தரவை தரவில்லை என்றால் 2016 சட்டமன்ற தேர்தல் போல் மூன்றாவது அணி அமைப்போம் என்றும் அக்கட்சி திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கிறதாம்.
கோட்டையில் முடிவு எடுக்கும் சக்தியாக vck வலிமை பெறும்
— Senkodi Balakrishnan @SenkodiOfficial (@senkodiwww) December 28, 2020
இதனையடுத்து விசிகவின் இந்த புதிய நிபந்தனையால் திமுக தலைமை என்ன செய்வது என்று அறியாமல் கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.அதிமுகவில் தான் கூட்டணி கட்சிகளிடம் ஒற்றுமையில்லை,திமுக கூட்டணி பலம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்று கூறி வந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் விசிகவின் இந்த கோரிக்கைகளால் திமுக கூட்டணியிலும் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளதாகவே கருதப்படுகிறது.

ஆனால் திமுக தரப்பில் சில மூத்த நிர்வாகிகள் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வெறும் 0.77 சதவீதம் ஓட்டு வாங்கிய விசிகவுக்கு ஆட்சியில் பங்கா? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா? அவர்களுக்கு இந்த முறை குறைவான தொகுதிகளே வழங்க வேண்டும் என்று திமுக தலைமைக்கு அறிவுரை கூறி வருகிறார்களாம். இந்நிலையில் எதை செய்வது என தெரியாமல் அறிவாலயம் தரப்பு கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.