மருத்துவர் ராமதாஸ் போட்ட மாஸ்டர் பிளான்! தைலாபுரம் தோட்டத்துக்கு ஓடிவந்த தமிழக அமைச்சர்கள்
வன்னியர் சமுதாயம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியுள்ளதால் அந்த சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கேட்டும் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து தமிழகத்திலுள்ள அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றும் கடந்த 40 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது.
இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த எம்ஜிஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் தங்களுடைய தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தாலும் அவர்கள் இந்த கோரிக்கைக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர்.இந்நிலையில் தற்போது அதிமுகவிலும் திமுகவிலும் முக்கிய தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற இது தான் சரியான தருணம் என்று ஒரு மாஸ்டர் பிளான் போட்டார் மருத்துவர் ராமதாஸ் .
அதாவது தேர்தல் நெருங்கும் நேரத்தில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து அதற்கான பல கட்டங்களாக போராட்டம் நடத்தி ஆளும் அதிமுக அரசுக்கு செக் வைத்தார்.சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரம் என்பதாலும்,அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் நிச்சயம் பாமகவின் தயவு தேவை என்பதாலும் மருத்துவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமலும், நிராகரிக்க முடியாமலும் தத்தளித்தது எடப்பாடி அரசு. குறிப்பாக பாமகவின் வாக்கு வங்கியை நிரூபிக்கும் வகையில் வன்னியர் சமுதாய மக்களை ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் அனைவரும் வியக்கத்தக்க வகையில் பல்வேறு போராட்டங்களை பாமக நடத்தியது. இது ஆளும் அரசுக்கு ஒரு வித அச்சத்தை உண்டாக்கியது.
இதனால் எடப்பாடி அரசு ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க குலசேகரன் ஆணையத்தை தொடங்கியது. இதன் மூலம் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். ஆனால் மருத்துவர் ராமதாஸ் இது காலம் தாழ்த்தும் செயல் என்று விமர்சித்தார். மேலும் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை தளர்த்தி வன்னியர்களுக்கு எம் பி சி பிரிவில் உள் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்றும் இதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவையில்லை என்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தரப்பு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் மற்ற சமுதாயங்களின் வாக்கு கிடைக்காது என்று பயந்து அதிமுகவின் அமைச்சர்களை மருத்துவரின் தைலாபுரம் தோட்டத்திற்கு தூது அனுப்பினார். ஆனால் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்தார். வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கொடுத்தால் கூட்டணி இல்லையேல் கூட்டணியை விட்டு வெளியே போவோம் என்றும் கெடு வைத்தார்.
அந்த கெடு ஜனவரி மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் ஜனவரி 30 ஆம் தேதியான நேற்று இரவு அதிமுக அரசின் முக்கிய அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் அன்பழகன் உள்ளிட்டோர் திண்டிவனத்திற்கு அருகிலுள்ள மருத்துவர் ராமதாஸின் இல்லமான தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றுள்ளார்கள்.சில மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் மருத்துவர் ராமதாஸ் கேட்ட வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியாகும் என்று அதிமுக அமைச்சர்கள் உறுதியளித்ததாக கூறப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அதிமுகவுடன் பிஜேபி கட்சியின் கூட்டணி உறுதியான நிலையில் தற்போது ஏறக்குறைய அதிமுக அரசுடன் பாமகவின் கூட்டணியும் உறுதியானது என்றே சொல்லலாம். இதற்கிடையே தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் கொடுத்தால் தான் நாங்கள் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிப்போம் இல்லையென்றால் தனித்து போட்டியிடுவோம் என்றும் அல்லது திமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாகவும் நேற்று அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருந்தார். இதைப்பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்று விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் கூறியிருந்தார்.
அதிமுக மற்றும் திமுக என்ற இரு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இல்லாத நிலையில் இரு கட்சிகளும் 2021 சட்டமன்ற தேர்தல் தேர்தலை சந்திக்க போகின்றது.இந்த நேரத்தில் ஒவ்வொரு கட்சிகளும் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கின்றன. இந்தத் தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை,இரு கட்சிகளும் யாருக்கு எதை கொடுத்து எப்படி வெற்றி பெற போகிறார்கள் என தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.