உனக்கு ஜாதி இருக்குதுண்ணா அவருக்கு இருக்காதா என்ன? சிவி சண்முகத்துக்கு ஆதரவாக களமிறங்கிய பாமக பிரமுகர்
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து தற்போது தமிழகம் வந்தடைந்தார். சசிகலாவின் வருகை அதிமுகவின் பல முக்கிய தலைவர்களுக்கு பிடிக்கவில்லை காரணம் இங்கே மீண்டும் அதிமுகவை கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்சம் தான் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் பலரும் சசிகலாவை எதிர்த்து பேச தயங்கி வரும் சூழலில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சசிகலா அவர்களையும், அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்களையும் ஆரம்பத்திலிருந்தே கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் டிடிவி தினகரன் அவருடைய பங்குக்கு சி.வி சண்முகம் நிதானம் இல்லாமல் தான் எப்போதும் பேசுவார் என்றும் அவர் ஒரு குடிகாரன் என்றும் மிகக் கடுமையாக விமர்சனங்களை வைத்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அதிமுக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சசிகலாவின் காரில் அதிமுக கட்சியின் கொடியை பயன்படுத்தியதற்கு விரைவில் சசிகலா மீது அவதூறு வழக்கு போடப்படும் என்றும் டிடிவி தினகரன் தான் சசிகலாவின் இந்த நிலைமைக்கு காரணம் என்றார். மேலும் தன்னை நிதானம் இல்லாதவர் என்று விமர்சிக்கும் தினகரன் தான் கூவத்தூரில் ஊத்தி கொடுத்தவர் எனவும் அவரின் குலத்தொழில் ஊத்தி கொடுப்பது தான்,ஊத்தி கொடுத்தே குடியை கெடுத்தவர்கள் தானே அவர்கள் என மிகவும் மோசமாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் தனிப்பட்ட முறையில் டிடிவி தினகரனை விமர்சித்ததற்கு சம்பந்தமே இல்லாமல் பல்வேறு தேவர் சமுதாய அமைப்புகளும் சட்டத்துறை அமைச்சர்க்கு எதிராக கண்டனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் செய்து வருகின்றனர். பலர் அமைச்சரை மிகவும் மோசமாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோவாகவும் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் தேவர் சமுதாயத்தை இழிவாக பேசிய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் போஸ்டர்கள் அடித்த சுவரொட்டியும் ஒட்டி வருகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு சசிகலாவை மிகவும் அருவருக்கத்தனமான கேவலமான வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்திருந்தார். அப்போதெல்லாம் அமைதியாக இருந்த இந்த தேவர் சமுதாய அமைப்புகள் இப்போது மட்டும் பொங்குவது ஏன் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஏற்கனவே வன்னியர்களின் தனி இட ஒதுக்கீடு போராட்டத்தை இழிவுபடுத்தி தேவர் சமுதாய அமைப்புகள் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.அதனால் சிவி சண்முகமும் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இதை இரு சாதிகளுக்கு இடையேயான பிரச்சனையாக மாற்ற தேவர் அமைப்புகள் முயற்சிக்கிறதோ என்ற சந்தேகத்தையும் பலர் கிளப்பியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க சட்டத்துறை அமைச்சருக்கு ஆதரவாக அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கணேஷ்குமார் அவர்கள் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தன்னை இழிவாக பேசிய டிடிவி தினகரனுக்கு அவருக்கு புரியும்படி பதில் கூறியிருக்குறார்,இதில் ஜாதி எங்கடா வந்துச்சு உனக்கு ஜாதி இருக்குதுண்ணா அவருக்கு இருக்காதா என்ன? என்றும் வன்னிய இனமே நீ சிந்திக்கும் தருணம் இது….. சிந்தித்தால் புரியும் மருத்துவர் அய்யாவின் மகிமை என பதிவிட்டுள்ளார்.தினகரனுக்கு ஆதரவாக தேவர் அமைப்புகள் களமிறங்க அதே போல சிவி சண்முகத்திற்கு ஆதரவாக வன்னியர் சங்கம் களமிறங்கும் என்பதை மறைமுகமாக இவர் குறிப்பிட்டுள்ளார் என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இதேபோல் சசிகலா அம்மையாரின் வருகையை ’’தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு” என்ற சென்னைவாசியின் நீண்டநாள் ஏக்கம் தீர்ந்தது என்று சமீபத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்திருந்தார். அப்போதிலிருந்து பாமகவுக்கும் டிடிவி தரப்புக்கும் மோதல் ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இரு கட்சிகளுக்கு இடையேயான இந்த பிரச்சனை இரு சமுதாயங்களுக்கு இடையேயான பிரச்சனையாக மாறிக்கொண்டு வருவதை தடுக்க தமிழக முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துக் கொண்டு வருகிறார்கள்.