தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது அதோடு அதற்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து வருகின்றார்.
ஒவ்வொரு மாவட்டத்தின் தேவைகளையும் அறிந்து கொண்டு அதற்கான பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 16.43 லட்சம் விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேபோல 24 மணி நேரமும் இலவசமாக மும்முனை மின்சாரம் அளிக்கப்படும் என்ற அதிரடி உத்தரவையும், பிறப்பித்து விவசாயிகள் இடையே அதிமுக மீதான ஆதரவையும் அதிகரித்துக் கொண்டார்.
அண்மையில் தென்காசி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுடைய விளைபொருட்களுக்கு நியாயமான விற்பனை விலை கிடைப்பதற்கு 10 மாவட்ட தலைநகர்களில் ரூபாய் 20 கோடியில் மிகப்பிரமாண்டமான சந்தைகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். இவ்வாறு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்ததாக, இந்த வரிசையில் பெண்களின் ஆதரவை பெறுவதற்காக ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அதன்படி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது அனைத்து மாவட்டத்திலும் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்களுக்கு எவ்வளவு தொகை கடனாக வழங்கப்பட்டு இருக்கிறது? என்பது குறித்த தகவல்களை கூட்டுறவுத்துறை தற்சமயம் சேகரித்து வருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதன்படி அடுத்த சில நாட்களில் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ததற்கான அரசின் உத்தரவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இருக்கின்ற தாய்மார்களும் பெண்களும் மகிழ்ச்சி அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.