சுபமுகூர்த்த நாளான இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் ஸ்டாலின், கமல்…!

Photo of author

By CineDesk

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர பிற நாட்களில் காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வேட்பாளர்களுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி, 100 மீட்டருக்கு முன்னதாகவே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும் என எக்கசக்க கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

அத்துடன் ஆன்லைனில் டெபாசிட் தொகை செலுத்துதல், வேட்புமனுவை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் உள்ளிட்ட வசதிகளையும் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. முதல் நாளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்த்து 70 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் 3வது முறையாக களமிறங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பகல் 1 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதன்பின்னர் அப்பகுதியை ஒட்டியுள்ள நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட உள்ளார்.

Stalin

அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பகல் 12.30 மணிக்கு கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அந்த தொகுதியில் 3வது முறையாக ஸ்டாலின் களமிறங்க உள்ளார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு திருவாரூரில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல், இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அங்கு மாலை பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இன்று முகூர்த்த நாள் என்பதால், அனைத்து கட்சி வேட்பாளர்களும், மனு தாக்கல் செய்ய உள்ளனர்.