தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக குஜராத் கொரோனா பரவலின் போது வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்த 2 அதிகாரிகளையும் தமிழக தேர்தலை கண்காணிக்க நியமித்துள்ளனர்.
கொரோனா பரவலின் காரணமாக தேர்தல் தேதியை அறிவிக்கும் போதே தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் அறிவித்திருந்தது. அதன்படி 80 வயதுக்கு மேற்பட்ட தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 12 லட்சத்திற்கு மேற்பட்டோர் தமிழகத்தில் 80 வயதுக்கும் மேற்பட்டோர் இருப்பது அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் 1.59 லட்சம் பேர் தபாலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதேபோல் 49,114 மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிப்பதற்காக விண்ணபித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல்துறையினர் 35,959 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.