கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் மயூர்பன்ஜ் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் தான் தஸ்மோஹபத்ரா. நேற்று இவர் இடைநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ரீனா பக்சால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். காராணம், கர்ப்பிணி பெண்ணை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்ததற்காக காவல் கண்காணிப்பாளர் தஸ்மோஹபத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மயூர்பன்ஜ் மாவட்டத்தின் உத்தாலா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கர்ப்பிணியான தனது மனைவி குருபாரியை பிக்ரம் பிரூலி என்பவர் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். பிக்ரம் ஹெல்மட் அணிந்த நிலையில் அவரது மனைவி உடல்நிலை காராணமாக ஹெல்மட் அணியவில்லை. இந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிக்ரமை வழிமறித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தஸ்மோஹபத்ரா விசாரணை நடத்தியதுடன், அவரது மனைவி ஹெல்மெட் அணியாததால் ரூ.500 அபராதம் விதித்துள்ளார். இந்த அபராத தொகையை உடனே அருகில் உள்ள காவல்நிலையத்தில் சென்று செலுத்தும்படி பிக்ரமை மிரட்டியுள்ளார்.
வேறு வழியின்றி தனது மனைவியை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு அபராதத்தொகையை பிக்ரம் சென்றுள்ளார். இதையடுத்து, கணவன் சென்றதை பின் தொடர்ந்து அவரது மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொளுத்தும் வெயிலில் நடந்து சென்றுள்ளார். இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரியவர கர்ப்பிணி பெண்ணிடமும், அவரது கணவரிடமும் கடுமையாக நடந்து கொண்ட காரணத்தினால் தஸ்மோஹபத்ராவை உடனடியாக இடைநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.