விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தோல்விக்கு காரணம் இது தான்? வெளியானது உண்மை நிலவரம்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.இந்நிலையில் திமுகவின் வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதிமுகவின் தோல்விக்கு அக்கட்சியினர் உள்ளடி வேலை செய்தததே காரணமாக பேசப்பட்டது.இதை உறுதி செய்யும் வகையில் தான் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.அதாவது திமுகவின் வெற்றியை பாராட்டி முன்னாள் அதிமுக நிர்வாகி ஒருவர் போஸ்டர் ஒட்டியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்து வருகிறார்.ஏற்கனவே இரண்டு முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் இந்த முறை ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் இவர் தோல்வி அடைந்ததது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.இதற்கு காரணமாக கூட்டணி கட்சிகள் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்று காரணமாக கூறப்பட்டது.
ஆனால் இதற்கு பதிலளித்த பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் அவரின் தோல்விக்கு அதிமுகவின் உட்கட்சி விவகாரம் மட்டுமே காரணம் என்று ஆணித்தரமாக கூறி வந்தனர்.இந்நிலையில் தான் திமுகவிற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் உண்மை நிலவரம் வெளியாகியுள்ளது.விழுப்புரம் பகுதியில் அம்மாவின் ஆத்மாவுக்கு நல்ல தீர்ப்பு வழங்கிய தமிழக மக்கள் என்று அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த போஸ்டரில் பணம் மனிதர்களை விலைக்கு வாங்கமுடியாது என்பதை நிரூபித்த தமிழக மக்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக உளுந்தூர்பேட்டை தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்த அடிமை அதிகாரத்தை திமுக வேட்பாளர் உடைத்தெறிந்துள்ளதாகவும் அதிமுகவிற்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரித்ததில் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளரும் அம்மா சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நலச் சங்க தலைவருமான ராஜா என்பவர் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தும் வகையில் அதிமுகவிற்கு எதிராக போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
வன்னியர்கள் மிகுந்த இந்த விழுப்புரம் மாவட்டத்தில் அந்த சமுதாயத்தை சேர்ந்தவரான சி.வி.சண்முகம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் இப்படி சொந்த கட்சியை சேர்ந்தவர்களே உள்ளடி வேலையை செய்தது அக்கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு காரணம் அங்கு மற்றவர்கள் யாருக்கும் கட்சியில் முக்கியத்துவம் வழங்காமல் இருந்தது தான் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லட்சுமணன் சிவி சண்முகத்தின் வளர்ச்சியை பிடிக்காமல் அதிமுகவிலிருந்து விலகி திமுகவிற்கு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டரில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட லட்சுமணன் மற்றும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட ஏஜே மணிகண்டன் உள்ளிட்டோரையும் வாழ்த்தி வாசகங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.