தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. ஆகவே அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழகத்தின் எதிர்க்கட்சியாக அதிமுக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இவ்வாறான சூழ்நிலையில், புதுக்கோட்டையில் அதிமுக தொண்டர்கள் சசிகலாவை தலைமை ஏற்க அழைப்பு விடுப்பது போல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் புகைப்படத்துடன் சசிகலாவின் புகைப்படத்தையும் அந்த சுவரொட்டியில் போட்டிருக்கிறார்கள்.
அப்படி ஒட்டப்பட்டிருக்கும் அந்த சுவரொட்டியில் கழகத்தை காத்திட வாரீர், புரட்சித்தலைவர் உருவாக்கிய புரட்சித்தலைவி அம்மா கட்டிக்காத்த கழகத்தை தியாகத் தலைவி சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் என்றும் இவன் அதிமுக புதுக்கோட்டை மாவட்டம் என்ற வாசகங்கள் இடம் பெற்றிருக்கிறது.
இதற்கு முன்னரே சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் சசிகலா தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை விட்டார். இந்த நிலையில் அதிமுகவின் நிர்வாகிகளின் பெயரில் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.