மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பைரன் சிங் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எஸ் தேவேந்திர சிங் கொரோனா காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்ற வாரம் திகேந்திர சிங் சிகிச்சை பலனில்லாமல் இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்கு பத்திரிக்கையாளர் கிஷோரே சந்திரவாங்கமும் சமூக ஆர்வலர் எரேண்ட்ரோ லெய்கொம்பமும் கிண்டலாக விமர்சனம் செய்து முகநூல் பக்கத்தில் பதிவு செய்து இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த இருவரும் தங்களுடைய முகநூல் பக்கத்தில் தேவேந்திர சிங் மறைவு தொடர்பாக பசுவின் சிறுநீரும், சாணமும் நோய்த்தொற்றை குணப்படுத்த இயலாது என்று பதிவு செய்து இருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது .அடுத்து சென்ற வியாழக்கிழமை அன்று காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 படி வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், சென்ற திங்கட்கிழமை அன்று அவர்களுக்கு இம்பால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து சிறையில் இருந்த அவர்களிருவரும் வெளியே வருவதற்கு தேவைப்படும் நடைமுறைகளை செய்வதற்கு முன்னதாக, அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இம்பால் மேற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே. மேகாசந்சிர சிங் அவர்கள் இருவர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்.