இதுக்கு கூடவாடா லஞ்சம் வாங்குவிங்க! கோவையில் அவலம்!

0
121

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை எரிக்க 22 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆய்வாளரை‌ நீக்கம் செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தை என்ற பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அங்குள்ள சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று பலனின்றி இறந்துள்ளார்.

 

இது தொடர்பாக சுகாதார ஆய்வாளர் திருப்பதி என்றவருக்கு மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. துடியலூர் மயானத்தில் எரிக்க பரிந்துரைத்த பொழுது, சடலத்தை துணியால் கட்டி மூடுவதற்கும், ஆம்புலன்சில் எடுத்துச் செல்வதற்கும், மயானத்தில் எரியூட்டுவதற்கும் சேர்த்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் இறுதி சடங்குகள் செய்ய வேண்டும் என்றால் கூடுதலாக 10,000 கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசியுள்ளார்.

 

இதனால் செய்வதறியாது திகைத்த அவரது உறவினர்கள் கடைசியில் 22 ஆயிரம் ரூபாய் கொடுத்து சடலத்தை வாங்கிச் சென்றுள்ளனர்.

 

இது குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க, துடியலுார் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்து விசாரித்து உள்ளனர்.

முதற்கட்டமாக தனியார் ஆம்புலன்சை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி ஆம்புலன்ஸ் டிரைவரிடம் விசாரணையை தொடங்கினர். தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் திருப்பதியை விசாரணை செய்தனர்.

 

விசாரணையில் உண்மை தெரியவரவே, அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கு பொறுப்பாளராகவும் தற்காலிகமாக பணிபுரிந்த திருப்பதியை, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று பணி நீக்கம் செய்யக்கோரி உத்தரவிட்டார்.

 

நேற்று கோவை மாநகராட்சியில் கமிஷனர் குமாரவேல் முன்னிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்டு செயல்படும் தனியார் ஆம்புலன்ஸ் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.

 

அதில் பேசிய கமிஷனர் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல, தமிழக அரசு நிர்ணயித்துள்ள, 10 கி.மீ., உட்பட்ட பகுதிக்கு ரூ.1,500, அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா ரூ.25 வீதம் கணக்கிட்டு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு, 10 கி.மீ.,க்கு ரூ.2,000, அதன்பின், ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.50, வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு, முதல், 10 கி.மீ.,க்கு ரூ.4,000, அதன் பின், கி.மீ.,க்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும். கூடுதல் வசூலித்தால், ஆம்புலன்சை பறிமுதல் செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் கூறியுள்ளார்.

Previous articleஸ்டாலினின் ராஜதந்திர நடவடிக்கை!
Next articleபல மாநிலங்களை அச்சுறுத்தும் புதிய வகையிலான நோய்த்தொற்று!