தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சேலத்திற்கு வருகை தந்தார். அங்கே இருக்கும் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜனுடன் கூடிய 500 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்ட நோய் தடுப்பு சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு இருந்து திருப்பூர் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலின் செல்லும் வழியில் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென்று காரை நிறுத்தச் சொல்லி இருக்கின்றார்.
இந்த நிலையில், யாருமே எதிர்பாராத வண்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற முதலமைச்சர் அங்கு நடைபெற்று வரும் மருத்துவ சிகிச்சை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார். அதன் பின்னர் மருத்துவ வசதிகள் தொடர்பாகவும், தடுப்பூசி செலுத்துவது தொடர்பாகவும், பொதுமக்களிடம் கேட்டறிந்து வருகிறார். அதோடு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை பார்வையிடுகிறார். சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட இந்த திடீர் ஆய்வு தொடர்பாக செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுபோன்ற சம்பவம் தான் சென்ற சில தினங்களுக்கு முன்பு நடந்தது எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் இரவு 11 மணி அளவில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இருக்கின்ற நோய்த்தொற்று கட்டளை மையத்தை திடீரென்று விசிட் அடித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அந்த சமயம் வந்த தொலைபேசி அழைப்புகளை எடுத்து உரையாற்றிய ஸ்டாலின் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். முதலமைச்சர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக ஸ்டாலினின் நடவடிக்கை இருப்பதாக அங்கே இருந்தவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு ஆங்காங்கே ஆய்வுகள் செய்வதும், திடீர் விசிட் அடிப்பதும், திமுகவிற்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படிதான் என்ற பேச்சும் தமிழகம் முழுவதும் உலா வருகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் ஸ்டாலினுக்கு சரிவர பேசக்கூட தெரியவில்லை என்கிற ரீதியில் அவர் தொடர்பான விமர்சனங்கள் தமிழகம் முழுவதும் பரவி வந்தது.
அப்படி இருக்கையில் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் அவருடைய செயல்பாடுகள் முற்றிலுமாக வேறுபட்டு இருக்கின்றன. இதனை கவனித்த நெட்டிசன்கள் இவர் ஸ்டாலின் கிடையாது. அவருடைய செயல்பாடுகள் இவ்வாறு இருக்காதே என்றெல்லாம் கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.